கமல் கட்சியில் குழப்பம் – கமீலா நாசர் வெளியேறுகிறாரா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

இதுவரை 113 தொகுதிகளுக்கு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும் நடிகை ஸ்ரீப்ரியா மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சி தொடங்கியதிலிருந்து அதில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் கமீலா நாசர். 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளூமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர்.

அக்கட்சியின் முன்னணியினர்களில் முக்கியமானவரான இவருடைய பெயர் முதல் இரண்டு பட்டியல்களிலும் இடம்பெறவில்லை.

என்ன காரணம்? என்று விசாரித்தால் அவர் கேட்ட தொகுதியை ஒதுக்க முடியாததால் வேறு தொகுதியில் போட்டியிடச்சொல்லி தலைவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள்.

என்ன நடந்தது?

அவர் தான் குடியிருக்கும் தொகுதியான விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்புக் கேட்டதாகத் தெரிகிறது.ஆனால் அக்கட்சியில் மெளரியா போன்றோரின் சதியால் அத்தொகுதி சினேகனுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் கோபமான கமீலா நாசரை சமாதானம் செய்து ஆயிரம்விளக்கு உள்ளிட்ட ஒருசில தொகுதிகளைக் குறிப்பிட்டு, அங்கே போட்டியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

அவற்றை முற்றாக நிராகரித்துவிட்ட கமீலா நாசர்,தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டதாகவும் கட்சியிலிருந்தே வெளியேறும் திட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகவல் உண்மையாக இருக்காது,அப்படி உண்மையாக இருந்தால் அது கட்சிக்குப் பெரும் பின்னடைவு என்று அக்கட்சியினரே சொல்கிறார்கள்.

கட்சியில் சீனியர், மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற இவருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுக்கும் நிலையில் அக்கட்சி இருப்பது கட்சிக்குள் பெரும் குழப்பம் நிலவுவதை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள்.

சென்னையில் இப்படியென்றால் கோவையில் வேறு மாதிரி நடந்திருக்கிறது. உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் மூகாம்பிகா, நான் போட்டியிடப்போவதில்லை, கட்சியிலிருந்தே விலகப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

அதற்குக் காரணம், அவர் பாராளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்றவராம். அவர், இப்போது பொள்ளாச்சியில் போட்டியிட வாய்ப்பு கேட்டாராம். ஆனால், அவரிடம் எதுவும் சொல்லாமலே உடுமலைப்பேட்டை என்று அறிவித்துவிட்டார்களாம்.

அதனால், கோபமான அவர் கட்சியை விட்டே விலகப்போவதாகச் சொல்லிவிட்டாராம்.

வேட்புமனு தாக்கல் முடியுமுன்பு இதுபோல் இன்னும் பல குழப்பங்கள் நடக்கப்போகிறதென்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response