வாக்கெடுப்பு நடத்தாமலேயே பெரும்பான்மை இல்லையென அறிவிப்பு – புதுச்சேரி பரபரப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் சமீபத்தில் பதவி விலகினர்.

இதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்டசபையில் 22 ஆம் தேதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக ஆளுநர் பொறுப்பை ஏற்ற தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் சட்டசபையில் நாராயணசாமி அரசின் பலம் 12 ஆகக் குறைந்தது. இதுதொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை 10 மணிக்குக் கூடியது. முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார்.அதன்பின் பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…..

புதுவையில் காங்கிரசு- தி.மு.க. கூட்டணி ஆட்சி சோனியா காந்தி, கலைஞரின் ஆசியாலும், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பேராதரவாலும் நடந்து வருகிறது.

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது…முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. நான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியைச் செய்து வருகிறார்கள்..

நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் மக்கள் எனக்கு அளித்தனர்.

அதேபோல் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசு, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களது காங்கிரசு வேட்பாளர் வைத்தியலிங்கம் 7 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மாநில பட்ஜெட்டில் அறிவித்ததில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடைபெற்றுவருகிறது. தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காகத் தொடர்ந்து போராடினோம்.

மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். மாநிலத்தின் வருமானத்தைக் குறைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். புதுச்சேரி மாநிலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க் கட்சிகள் தற்போது அஸ்திரத்தை எடுக்கின்றனர்.

நான் எங்களுடைய ஆட்சியில் 4 ஆண்டுகாலச் சாதனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுத்தேன். இருந்தாலும் கூட புதுச்சேரி மாநில மக்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாக சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விட்டுவிட்டுச் சென்ற திட்டங்கள், நிறைவேற்றாமல் சென்ற திட்டங்கள், அடிக்கல் நாட்டாமல் சென்ற திட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் எனக் கூறினார

தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். இதனால், முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரியில் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்கு நாராயணசாமி சென்றார். அங்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து, ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது அவர் தான்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, நியமன உறுப்பினர்கள் 3 பேரை நியமித்து புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்புச் செய்த மத்தியில் ஆளும் பாஜக அரசையும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசு மற்றும் அதிமுகவுக்கும் புதுச்சேரி மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தகுந்த தண்டனை கொடுப்பார்கள்

என்று நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Response