
சாலமன் அருளானந்தன் டேவிட், பரவலாக காந்தியம் டேவிட் என்று அறியப்பட்டவர் 1983 கறுப்பு ஜூலையின் போது வெள்ளிக்கடை சிறையில் படுகொலையிலிருந்து தப்பியவர். அதே ஆண்டில் மட்டகளப்புச் சிறையிலிருந்தும் தப்பியவர். அதுமுதல் இதுவரை தமிழகத்தில் வாழ்ந்து சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்குச் சென்றவர். தனது 91-வது அகவையில் இன்று சாவெய்தினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியில் காந்திய இயக்கத்தை தொடங்கினார் சாலமன் டேவிட். அதே வேளையில் புலிகளின் ஆயுதப்போராட்டத்தையும் ஆதரித்தவர், ஆயுதப் போராட்டத்திற்கு ஈடாக ஒரு வெகுமக்கள் திரளின் இயக்கச் செயல்பாடுகளையும் முன்வைத்தவர். தனி ஈழம் ஒன்றே தீர்வு என்ற கருத்துடையவர்.
யாழ்தீபகற்பத்திற்கு அருகில் உள்ள கேட்ஸ் தீவில் கரம்பன் ஊரில் 1924 ஏபரல் 24 – ம் நாளன்று பிறந்தார் திருவாளர் டேவிட். 1950 வரை ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி கற்றார். திரும்பி வந்ததும் சிலோனில் உதவி கட்டடக் கலைஞராகவும், நகரத் திட்டவியலாளராகவும் பணிபுரிந்தார். மீண்டும் வெளிநாடு சென்றவர் தாயகப் பணிக்காக மீண்டும் திரும்பி வந்தார். 1977 முதல் 1983 வரை முனைவர் ராஜசுந்தரம் அவர்களுடன் சேர்ந்து மாவட்ட மைய வலைப்பின்னல் அமைப்பை ஈழம் முழுவதும் அமைத்தார். யாழ், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அந்த மையங்கள் இன்றும் செயல்படுகின்றன.
1983-ல் அவர் கைது செய்யப்படுகையில் அவரது காந்திய இயக்கம் 450 இலவச மழலையர் பள்ளிகளை நடத்தி வந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 30 மழலையர் கற்று வந்தனர். வவுனியா, மட்டகளப்பு, திரிகோணமலை ஆகிய இடங்களில் மாதிரிப் பண்ணைகளையும் இயக்கம் நடத்தி வந்தது. இப்பண்ணைகள் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த எளிய வாசல்களாக விளங்கின. நடமாடும் மருந்தகங்களையும், பெண்களுக்குப் பயிற்சி கொடுக்கும் மையங்களையும் இயக்கம் நடத்தி வந்தது.
இவை தவிர அரச பேரின வன்முறையில் பாதிக்கப்பட்ட 5,000 தேயிலைத் தோட்ட குடும்பங்களுக்கு வன்னியில் பாதுகாப்பும், உதவிகளும் அவரது இயக்கம் தந்து வந்தது. தனது இறுதி விருப்பங்களாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டு விருப்பங்களைத் தெரிவித்திருந்தார். அவரது நூல்களை சுதந்திரத் தமிழீழத்தில் அமையும் ஒரு நூலகத்துக்குக் கொடுக்க வேண்டும், மற்றும் சுதந்திர வன்னியில் அவரது உடல் புதைக்கப்பட வேண்டும். 2012-ம் ஆண்டு அவர் கூறுகையில், ” நான் பகுதியளவு சுதந்திரத்தை அனுபவித்து விட்டேன். எனக்கும், எனது மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை வேண்டுகிறேன். ஆனால் நான் முழுமையாக கட்டுத்தளையில் ஆட்பட்டிருந்தேன். அது நரகம். முழுமையான சுதந்திரமே சொர்க்கம். தமிழர்கள் தமது சொந்தமண்ணில் சுதந்திரத்துடன் வாழும் உரிமையுடையவர்கள் என்பதில் என் மனதில் எவ்வித மாறுபாடும் இல்லை” என்றார்.
மொழிபெயர்ப்பு: நிலவரசு கண்ணன்


