ப.சிதம்பரம், இளங்கோவன் ஆகியோரை தமிழக அரசு விசாரிக்கவேண்டும்- சுப.உதயகுமாரின் அதிரடிக் கோரிக்கை

கூடங்குளம் மோசடிகள் பற்றி விசாரிக்க தமிழக அரசு உடனடியாக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இனியன் குழு அறிக்கையை தமிழக முதல்வர் தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

காங்கிரசுத் தலைவர்கள், அணுசக்தித் துறை அதிகாரிகள், ரஷ்ய தூதர் போன்றோர் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பம்புகள் வேலை செய்யாத காரணத்தால்தான் மின்உற்பத்தி தாமதமாகிறது என்றும், பம்புகளை சரி பார்த்து வருவதாகவும், நவம்பர் மாதம் 15-ம் தேதி வாக்கில் மின்சார உற்பத்தித் துவங்கும் என்றும் முன்னாள் அணுசக்தித் துறைத் தலைவர் டாக்டர் எம். ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்.

“உலகத்திலேயே சிறந்த அணுஉலை” என்று அப்துல் கலாம் போன்றவர்கள் சான்றழித்த நிலையில், கேவலம் பம்புகள்கூட சிறப்பாக வேலை செய்யவில்லையா? புத்தம்புதிய பம்புகள் ஏன் ஒழுங்காக வேலை செய்யவில்லை சீனிவாசன் அய்யா? எந்த நிறுவனத்திடமிருந்து அந்தப் பம்புகளை வாங்கினீர்கள்? எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறீர்கள்? அவற்றுக்குக் காப்பீடு உண்டா?

கூடங்குளம் 2-வது அணுஉலை 2016-ஆம் ஆண்டு இயங்குமாம், சீனிவாசன்அய்யா சொல்கிறார். இந்த வருடம் கடைசி என்றிருந்ததை அடுத்த வருடத்துக்கு தள்ளிவிட்டு விட்டார்.

இந்த சீனிவாசன் அய்யாதான் கூடங்குளம் அணுஉலை அமைந்திருக்கும் இடத்தை தல ஆய்வு செய்து தேர்வு செய்தவர். அந்த தல ஆய்வு அறிக்கையை எங்களுக்குத் தாருங்கள் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். மத்திய தகவல் ஆணையம் அதை மக்களுக்குக் கொடுங்கள் என ஆணையிட்ட பிறகும், இந்திய அணுமின் கழகம் தில்லி உயர்வழக்கு மன்றம் சென்று தடையாணை வாங்கியிருக்கிறது. ஏன் பயப்படுகிறார்கள்? எதை மறைக்கிறார்கள்?

கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு நியமித்த நான்கு பேர் கொண்ட இனியன் குழுவில் ஒருவர்தான் இந்த சீனிவாசன் அய்யா. இந்த இனியன் குழுவின் அறிக்கையை தமிழக முதல்வர் தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அணுசக்தித் துறையின் தகிடுதத்தங்களை அனைவரும் தெரிந்து கொள்ள இது உதவும்.

மேலும் கூடங்குளம் மோசடிகள் பற்றி விசாரிக்க தமிழக அரசு உடனடியாக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்!
காங்கிரசுத் தலைவர்கள் மன்மோகன் சிங், நாராயணசாமி, ப. சிதம்பரம், இளங்கோவன் போன்றோரும்; அணுசக்தித் துறையைச் சார்ந்த எஸ். கே. ஜெயின், காசிநாத் பாலாஜி, எம். ஆர். சீனிவாசன் போன்றோரும்; ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் உள்ளிட்டோரும் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். இந்திய மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கியது பற்றி மட்டுமல்லாமல், தமிழக மக்கள் மீது ஒரு தரமற்ற அணுஉலை எனும் பேராபத்தை சுமத்திய குற்றம் பற்றியும் தீர விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
நெல்லை மாவட்டம்
(தொடர்புக்கு: சுப. உதயகுமாரன், ஒருங்கிணைப்பாளர், 9865683735)

Leave a Response