எட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு 2018 ஆம் ஆண்டில் அரசாணையை வெளியிட்டது.

இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது.

இத்திட்டத்தை எதிர்த்து விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், ‘சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் எந்தவிதக் கருத்தும் கேட்கப்படவில்லை. அரசியலமைப்பின் நில அளவு சட்டமும் பின்பற்றப்படவில்லை. சுற்றுச்சூழல் ஒப்புதலும் பெறவில்லை. இந்த சட்ட விதி மீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவை இரத்து செய்யப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் எட்டு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்துறைத் திட்ட அதிகாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் நாகமுத்து, வழக்குரைஞர்கள் பாரி வேந்தன், பாலு ஆகியோர் ஆஜராகி,”சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தை பொருத்தமட்டில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என வாதாடினர்.

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி,”சுற்றுச்சூழல் துறையில் இருந்து இந்தத் திட்டத்திற்கு அனுமதி பெறுவது ஒரு செயல்முறை தானே தவிர, அதனை வாங்கினால் தான் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்பது கிடையாது.எப்போது வேண்டுமானாலும் அதனை வாங்கலாம்’’ என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது…..

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பான விவகாரத்தில் அதற்கான நிலங்களை விவசாயிகளிடம் முறையாக வாங்காமல் நெடுஞ்சாலைத் துறை தரப்பில் நீங்களாகவே அதனை உங்களது பெயருக்குத் தன்னிச்சையாக மாற்றிப் பதிவு செய்து உள்ளீர்கள்.அது செல்லத்தக்க ஒன்று கிடையாது.

இதில் நிலப்பதிவு என்பது சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடாக நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறைத் திட்ட அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டாலும், உங்களது திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.

இதில் மீண்டும் புதிய அரசாணை அறிவிக்கை ஒன்றைப் பிறப்பித்த பின்னர் அதுகுறித்த நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ள முடியும். இதில் தற்போது உள்ள அரசாணையை வைத்து எந்தப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

மேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இதில் முன்னதாக மத்திய மாநில அறிவிப்பு மற்றும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும் சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மட்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இதில் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நிலங்களையும் முதலில் விவசாயிகளிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.

இதையடுத்து திட்டம் குறித்த புதிய அரசாணை அறிவிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அவர்களின் முழு ஒத்துழைப்போடு திட்டத்திற்கான நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் இருந்து முறையாக வாங்கி நெடுஞ்சாலைத் துறை தரப்பில் நிலப்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, நில உரிமையாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீடு மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Response