பனிரெண்டாம் வகுப்பு முடித்த தமிழ் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்வாய்ப்பு

கடந்த பல ஆண்டுகளாக சென்னை  பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் தமிழ் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு சமப்பிரதான வித்துவான், 2டி வித்துவான், புலவர் என்ற பெயர்களில் பட்டயங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையை மாற்றி புலவர் பட்டமாக வழங்க வேண்டும் எனத் தமிழ்ச் சான்றோர்களும், மாணவர்களும் 1970-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்தனர்.

அதை ஏற்று 2013-14 கல்வியாண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூன்றாண்டு கால புலவர் பட்டப் படிப்புக்கு அனுமதி வழங்கியது.

இந்தப் பட்டப் படிப்பு, தஞ்சாவூர், வெண்ணாற்றங்கரையில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் உள்ளது. இது குறித்து அக்கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவர் மு.இளமுருகன் தெரிவித்தது:

இந்தக் கல்லூரி 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மூன்றாண்டு காலத் தமிழ்ப் புலவர் பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கிடைத்த அனுமதியைத் தொடர்ந்து 2013- 14  ஆண்டு முதல் இந்தப் படிப்பு புலவர் பட்டப் படிப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி இன்னமும் கல்வி மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அறிவியல் மொழியாகவோ வளரவில்லை. இந்தக் குறையைப் போக்கும் விதமாக தமிழ்ப் பேரறிஞர்களின் கூட்டு முயற்சியுடன் புலவர் பட்டப் படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. புலவர் பட்டப் படிப்பு வேறெங்கும் கிடையாது.

மூன்றாண்டு கால அளவுள்ள இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பை ஆய்வு முறையில் படிக்க வேண்டும் என்பதால், தமிழ் ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர முன்வருவர்.

மொத்தம் 6 பருவங்களைக் கொண்ட இந்தப் படிப்பில் 36 தாள்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது, தமிழ் இலக்கண, இலக்கியச் செறிவுடன் கூடிய தொல்காப்பியம், திருக்குறள், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய 5 இலக்கணங்கள், நன்னூல், புறப்பொருள் வெண்பா மாலை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தாள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விருப்பத் தேர்வுப் பாடங்களாகக் கணினி அறிவியல், நாடகத் தமிழ் ஆகியவை உள்ளன.

இந்தத் தாள்கள் தமிழ் அறிஞர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத் திட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளன.

இந்தத் தாள்களைக் கற்பிக்க,  பாரதிதாசன் பல்கலைக்கழகத் துறைகள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசை, நாடக, கல்வெட்டு, ஓலைச்சுவடித் துறைகள், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் ஆகியவற்றுடன் இணைந்து பயிற்றுவிக்கக் கூடிய வகையில் பரந்துபட்ட நோக்கில் பாடத்திட்டங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சிக்குரிய தாள்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுகளுக்கு 40 மதிப்பெண்களும் வழங்குமாறு மதிப்பீட்டு முறை அமைக்கப்பட்டுள்ளது. இது, தமிழ் இலக்கியக் கல்வியில் புதிய முயற்சியாகும்.

இத்தகைய பாடத் திட்டத்தால் தமிழ்ப் புலவர் பட்டம் பயில்வோர், தமிழிலக்கியப் பகுதிகளை இசையுடன் கற்கவும், கற்பிக்கவும் ஆற்றல் பெறுவர். அரசின் இதர துறைகளிலும் பணி வாய்ப்புக் கிடைக்கிறது.

எழுத்தாற்றல், இசைத் தமிழ்ப் பொழிவுகள், ஊடகவியல் உள்ளிட்ட தமிழுடன் தொடர்புடைய இதர துறைகளை வளர்ந்துவரும் கால வளர்ச்சிக்கு ஏற்ப அறிந்தவர்களாக இவர்கள் திகழ்வர்.

இந்தக் குறிக்கோளுடன் தமிழ்ப் புலவர் பட்ட வகுப்பு குருகுல முறை போல நடத்தப்படுகிறது. இந்த அரிய முயற்சியை தமிழறிஞர் பி.விருத்தாசலனார் முன்னெடுத்தார்.

புலவர் பட்ட வகுப்புடன் சொற்பொழிவாற்றல், படைப்பாக்கம், கலைப் பயிற்சி, ஊடகத் தகவல் தொழில்நுட்ப முறைகள் ஆகிய தனிப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இங்கு பயின்றவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் தமிழாசிரியராகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் இதர துறை தேர்வுகளிலும் பலர் வெற்றி பெற்றுள்ளனர் என்றார் இளமுருகன்.

Leave a Response