
இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், பெண் எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் (67) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இதற்கான அறிவிப்பை ஸ்வீடிஷ் அகாதெமி வியாழக்கிழமை வெளியிட்டது.
“இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லும் 14-ஆவது பெண் இவர். ரஷிய மொழியில் இவர் எழுதி வருகிறார்.
இரண்டாம் உலகப் போரில் பங்களித்த நூற்றுக்கணக்கான பெண்களுடன் நடத்திய நேர்காணல்களின் அடிப்படையில் இவர் 1988-இல் வெளியிட்ட “வார்ஸ் அன்உமன்லி ஃபேஸ்’ என்னும் புத்தகம் இவருடைய முக்கியப் படைப்புகளில் ஒன்றாகும்.
பல்வேறு கருத்துகளை வெளியிட்ட மானுடத்தின் குரல்களைப் பதிவு செய்து, மனித உணர்வுகளின் வரலாறு, ஆத்மாவின் வரலாற்றை அவர் உருவாக்கியதாக ஸ்வீடிஷ் அகாதெமியின் செயலர் ஸாரா டேனியஸ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார். மிக நூதனமான முறையில் ஒரு பெரும் காலகட்டத்தைக் குறித்து நாம் ஆழ்ந்து அறிந்து கொள்ளச் செய்தவர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் என்று
ஸ்வீடிஷ் அகாதெமி தெரிவித்தது.
இன்றைய உக்ரைனின் ஸ்டானிஸ்லாவ் நகரில் பிறந்த ஸ்வெட்லானா, மின்ஸ்க் நகரில் இதழியலில் தேர்ச்சி பெற்று பத்திரிகையாளரானார். பத்திரிகையாளராகப் பணியாற்றிக் கொண்டே சிறிது காலம் பள்ளி ஆசிரியை பணியையும் மேற்கொண்டார். பின்னர் பத்திரிகைத் துறையை நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். செய்திகள், கட்டுரைகள், கதைகள் என பல்வேறு வடிவங்களிலும் அவருடைய எழுத்து அமைந்தது.
பெலாரஸ் எழுத்தாளர் அலெஸ் ஆதமோவிச் ஊக்குவிப்பால், நேர்காணல்கள், உண்மை அனுபவங்கள் அடிப்படையில் இலக்கியம் படைக்கத் தொடங்கினார். அவருடைய புதுமையான படைப்புகளில் செர்னோபில் அணு உலை விபத்து, குழந்தைகளின் பார்வையில் போர் அனுபவங்கள் ஆகியவை குறித்து எழுதிய புத்தகங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.
ஆங்கிலம் உள்பட பல ஐரோப்பிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல சர்வதேச இலக்கியப் பரிசுகளை இவர் பெற்றுள்ளார்.
அரசை விமர்சிக்கும் இவரது எழுத்துகளுக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பெலாரஸ் நாட்டைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் வசித்தார்.
இவருக்கு நோபல் பதக்கத்துடன், 9.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 6.2 கோடி) ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
