ரஷ்ய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய், காந்தி ஆகியோர் திருக்குறளின் மேன்மையை உணர்ந்தவர்கள்

தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:

காந்திக்கு முன்னதாகவே இங்குள்ள தமிழர்கள் சிலர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயிடம் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தனர். இந்தியர்களுக்கு எதிராக ஏவிய அடக்குமுறை குறித்தும், அவர்கள் போராட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வேண்டி டால்ஸ் டாய்க்குக் கடிதம் எழுதினார் ‘தி ஆர்யா’ என்ற இதழின் ஆசிரியர் ராமசேவன். அவருக்கு  “இந்துவுக்கு ஒரு கடிதம்’ என்ற தனிக் கட்டுரையை டால்ஸ்டாய் எழுதி அனுப்பினார். அதில் ஆறு திருக்குறள்களை மேற்கோள்காட்டி எழுதியுள்ளார் டால்ஸ்டாய். இக்கட்டுரையைப் படித்த பின்னர் தான் திருக்குறளின் மேன்மை குறித்து காந்தி அறிந்து கொண்டார்.

அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள் மூலமும் தமிழகத்தில் அவர் வைத்திருந்த தொடர்பின் மூலமும் திருக்குறளைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு அதன் சிறப்பை பல கூட்டங்களில் பேசத் தொடங்கினார் காந்தியடிகள்.

பிறகு வட நாட்டில் ஒரு எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசியபோது திருவள்ளுவர் என்ற படைப்பாளியை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே சிறந்த படைப்பாளியாக இருக்க முடியும் என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் காந்தியடிகள் தமிழகத்துக்கு அடிக்கடி வந்து தமிழ் மக்களிடையே உரையாடினார் என்றார்.

இவ்விழாவுக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், செயலாளர் ஆர்.ஜி.சுந்தரம், பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், ஐஎம்ஏ முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார், டாக்டர் ஜீவானந்தம், ஜெயசூர்யா டிபார்ட்மென்ட் நிர்வாக இயக்குநர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Response