இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்

எது வளர்ச்சி’ என்ற தலைப்பில் சென்னையில் அக்டோபர் 2 ஆம் தேதி, கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரபா கல்விமணி, கிறிஸ்துதாஸ் காந்தி, வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் கல்வியாளர் பிரபா கல்விமணி பேசியதாவது:

பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடம் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் ஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. கடந்த ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து 2700 பேர் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து 450 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 419 பேர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்தவர்கள்.

ஐஐடியில் இந்தி வழிக்கல்வி இல்லாதபோதும் இந்தியில் நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது போலவே தமிழிலும் கேள்வித் தாள்கள் இருந்தால், தமிழக மாணவர்களுக்கு அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களை பாதுகாக்க கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response