பிரியங்காகாந்தியின் உடையைப் பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்ட காவல்துறை – மக்கள் கோபம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கிச் சென்ற காங்கிரசு தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகப் பிடித்து கீழே தள்ளினர். பிரியங்கா காந்தியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். காவல்துறையின் இந்தச் செயலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன்பின்னர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன் தினம் மீண்டும் ஹத்ராஸ் சென்றனர். அவர்களுடன் காங்கிரசு பாராளும்ன்ற உறுப்பினர்களும் ஹத்ராஸ் நோக்கிப் புறப்பட்டனர். அவர்களை டெல்லி-நொய்டா எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹத்ராஸ் நோக்கிச் செல்ல அனுமதிக்கும்படி ராகுல், பிரியங்கா போராட்டம் நடத்தினர். காவல்துறையினருக்கும் காங்கிரசு நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதன்பின்னர் காவல்துறையினரின் அனுமதியின் பேரில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேர், ஹத்ராஸ் சென்று பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முன்னதாக, டெல்லி-நொய்டா எல்லையில் நடந்த களேபரத்தின்போது, ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்துத் தடுத்து நிறுத்தியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியக் கட்சியின் முக்கிய பெண் தலைவரிடமே காவல்துறை இவ்வாறு நடந்து கொள்ளும் என்றால், எளிய மக்களிடம் எத்தகைய கடுமையான போக்கைக் கையாளும் என சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவிப்பதாக நொய்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளார். மேலும், பிரியாங்கா காந்தியிடம் மன்னிப்பு கோருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நொய்டா மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நடந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிரியங்காகாந்தியின் உடையைப் பிடித்து இழுத்த நிகழ்வு உறுதியாகியுள்ளது.இதனால் மக்களின் கோபம் அதிகரித்துள்ளது.

Leave a Response