பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சட்டசபைத் தேர்தலை நடத்துவது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது, கொரோனா பாதிப்பு காரணமாக 70 நாடுகள் தேர்தலைத் தள்ளிவைத்துள்ளன. பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது.

வாக்காளர்கள் நெரிசல் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பீகார் தேர்தல் வாக்களிப்பு நேரம், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு மையம் என நிர்ணயம் செய்யப்படும்.

இதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைவதற்குப் பதிலாக, காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். எனினும், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்நேர நீட்டிப்பு இருக்காது என அரோரா கூறியுள்ளார்.

பீகார் சட்டசபைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 2 ஆவது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியும், 3 ஆவது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவித்து உள்ளார்.

Leave a Response