இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – மக்கள் கடும் அதிருப்தி

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.

இவற்றில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), சமயபுரம் (திருச்சி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), விஜயமங்கலம் (குமாரபாளையம்), பாளையம் (தர்மபுரி), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொராட்டாண்டி, திருமாந்துறை (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), விக்கிராவாண்டி (விழுப்புரம்), திருப்பராய்த்துறை (திருச்சி) உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1 ஆம் தேதி,செவ்வாய்க்கிழமை) முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டண உயர்வு வழக்கமான நடை முறை தான் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் இபாஸ் முறை இரத்து செய்யப்பட்டதால் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்கிற நிலையில் இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Leave a Response