கர்நாடகத்தில் அழிந்துவரும் தமிழ்ப்பள்ளிகள்- அதிர்ச்சிகர உண்மை

கர்நாடகத்தில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திணை தமிழ்க்களம் அமைப்புத் தலைவர் புலவர் கார்த்தியாயினி வேண்டுகோள் விடுத்தார்.

திணை தமிழ்க்களம் அமைப்பு சார்பில் பெங்களூரு, காக்ஸ்டவுனில் உள்ள அரசு மாதிரி ஆரம்ப தமிழ்ப் பள்ளியில் சனிக்கிழமை நடந்த விழாவில் மாணவர்களுக்கு வெள்ளை சீருடையை வழங்கி அவர் பேசியது:

பெங்களூரு, கோலார் தங்கவயல், சாமராஜ் நகர், மைசூரு, தாவணகெரே உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ்க் குழந்தைகளுக்காக ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால், நாளடைவில் இப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் தேர்வு எழுதிய காலம் இருந்தது. இன்றைக்கு ஆயிரத்திற்கும் குறைந்த மாணவர்கள் மட்டுமே தமிழ்த் தேர்வு எழுதுகிறார்கள். இந்த நிலை உருவானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தமிழ்ப் பள்ளிகளில் நமது குழந்தைகளைப் படிக்க வைக்காததே முக்கியக் காரணம்.

இப்போது தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் அல்லது ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்க இயலாதவர்கள் அல்லது மீண்டும் தமிழகத்துக்குத் திரும்பக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இந்த பள்ளிகளைக் காக்க வேண்டியது தமிழர்களாகிய நமது தலையாய கடமை.

காக்ஸ்டவுனில் உள்ள இப் பள்ளி 100 ஆண்டுகள் பழைமையானது. ஆனால், இங்கு 72 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். இப் பள்ளியில் கணினி வசதி இல்லை. மாணவர்களுக்குப் புத்தகப் பைகூட இல்லை. தமிழ் மாணவர்களுக்கு உதவ நல்ல உள்ளங்கள் முன்வர வேண்டும்.

போதுமான இட வசதி இருந்தும் மாணவர்கள் இல்லாததால், பள்ளியை நடத்துவது குறித்து மாநில அரசு யோசித்து வருகிறது. பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிகளைக் காண்பது அரிதாகிவிடும். எனவே, கர்நாடகத்தில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ் படித்தால் என்ன பயன் என்று பேசிக்கொண்டிருக்காமல், செல்வம் படைத்த தமிழர்கள் தமிழ்ப் பள்ளிகளைக் காக்க ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்றார்.

Leave a Response