
தமிழக காங்கிரசுக் கட்சியின் செயல் தலைவரும், கன்னயாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமாருக்கும் (வயது 70), அவருடைய மனைவி தமிழ்ச்செல்விக்கும், உதவியாளர் கோபிக்கும் அறிகுறியற்ற கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வசந்தகுமாரும், அவருடைய மனைவி தமிழ்ச்செல்வியும் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வசந்தகுமாரின் உடல்நிலை நேற்று (ஆகஸ்ட் 28) மாலை மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட மருத்துவக் குறிப்பில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.பி.க்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், இருந்தபோதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தகுமார் மாலை 6.56 மணிக்கு மரணம் அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மரணம் அடைந்த வசந்தகுமாரின் வாழ்க்கை வரலாறு……
வசந்தகுமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் ஆகும். இவர் ஹரிகிருஷ்ணன் நாடார்-தங்கம்மாள் தம்பதியருக்கு 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மகனாக பிறந்தார். எம்.ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்.
வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். சைக்கிளில் வீடு, வீடாக சென்று பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வந்தார். தனது உழைப்பு, விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து 1978 ஆம் ஆண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளை தொடங்கினார்.
‘வசந்த் அன்ட் கோ’ என்று தனது பெயரிலேயே அவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் கிளைகள் இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலும் பரந்து விரிந்து உள்ளது. தனது சிரிப்பையே ‘வசந்த் அன்ட் கோ’ விளம்பர பிராண்டாக வசந்தகுமார் மாற்றினார்.
சிறந்த தொழில் அதிபராக மட்டுமின்றி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் திறமைக்கு சொந்தக்காரராக வசந்தகுமார் திகழ்ந்தார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிபடியாக முன்னேறியது தொடர்பாக ‘வெற்றிக் கொடிகட்டு’ என்ற தலைப்பில் அவர் சுயசரிதையும் எழுதினார். இந்த சுயசரிதை புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் இணைந்து வெளியிட்டார்.
வசந்தகுமார் 2008 ஆம் ஆண்டு வசந்த் டி.வி.யை ஆரம்பித்தார். இந்தத் தொலைக்காட்சி மூலம் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி வந்தார்.
வசந்தகுமார் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். காங்கிரசுக் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வர்த்தக பிரிவு தலைவர், துணை தலைவர், செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். காங்கிரசுக் கட்சி சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று வந்தார்.
காங்கிரசுக் கட்சி சார்பில் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகள் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக எச்.வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கன்னியாகுமரி தொகுதி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். தனது தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய மந்திரிகளுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கைகள் அனுப்பி வந்தார். நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்பிய உறுப்பினர் என்ற பாராட்டைப் பெற்றவர். கொரோனா காலத்திலும் கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வந்தார்.
மரணமடைந்த எச்.வசந்தகுமாருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், விஜய் வசந்த், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும், தங்கமலர் என்ற மகளும் உள்ளனர். இதில் விஜய் வசந்த் திரைப்பட நடிகர் ஆவார். சென்னை-28, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் இவரது சகோதரர் ஆவார். தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வசந்தகுமார் சித்தப்பா ஆவார்.
வசந்தகுமார் உடல், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரசுக் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. காலை 10.30 மணி வரை வசந்தகுமாரின் உடல் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்படுகிறது. பின்னர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மதியம் 2 மணி வரை உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, சொந்த ஊரான கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் கொண்டு செல்லப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்கள் உடலை வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் நேரடியாக அடக்கம் செய்யும் நடைமுறை இருக்கிறது.அதற்கு மாறாக வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
