கும்பகோணம் பெண்கள் அடைத்து வைப்பு – மீட்ட நாம் தமிழர் கட்சியினர்

சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களை நாம் தமிழர் கட்சியினர் மீட்டதாகவும் அக்கட்சியினர் சொல்கிறார்கள். இதுகுறித்து புதுகை வெற்றிச்சீலன் எழுதியுள்ள பதிவில்….

சென்னையில் தவித்த நூற்றுக்கணக்கான பெண்களை மீட்ட நாம் தமிழர் உறவுகள்!
—————————————————————

நேற்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை தம்பி பார்த்தா விடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு. பதட்டமான குரலில் சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் நமது கும்பகோணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பணிபுரிந்து வந்ததாகவும், இந்த நோய்த்தொற்று காலத்தில் அந்தப் பெண்கள்
‌ஊருக்கு திரும்ப விரும்பியதாகவும் ஆனால் அந்த நிறுவனம் அதை அனுமதிக்க மறுத்து அந்த பெண்களை தொடர்ச்சியாக அங்கே அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் தகவலை கூறினார். எப்படியாவது நமது கட்சி அதில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நான் உடனே காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருவரான தம்பி நாம் தமிழர் சஞ்சீவிநாதன் யை தொடர்புகொண்டேன். அவர் உடனடியாக தொழிற்சாலை மற்றும் விடுதி இருக்கும் பகுதியின் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஐயா .க.சந்திரசேகர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க, ஐயா நமது 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தம்பிகளுடன் உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விட்டார்.

அந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் Foxconn என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பணிக்காக சுமார் 1500 மேற்ப்பட்ட கும்பகோணத்தை சார்ந்த பெண்களை போன மார்ச் மாதம் அழைத்துப் போன முதல் இன்று வரை ஊருக்கும் அனுப்பாமல், கொரோனா பாதிப்பு உள்ள மகளிருக்கு மருத்துவமும் அளிக்காமல், சுமார் ஆறு மாதங்களாக, விடுதியில் அடைத்து வைத்து அடிமை போல நடத்தி கொடுமை படுத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து நேரடியாக விசாரணை செய்த நமது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ‌ உடனே இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்‌ . அதன் பேரில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் உடனே வந்து விட்டார்கள்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட அந்த பெண்களை அணுகி புகார் அறிந்து காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாச்சியர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக அந்த பெண்களின் சுய விருப்பமாக கோரிக்கையாக இருந்த “ஊருக்கு அனுப்பி வைத்தல்” என்பதை அறிந்து அவர்களை சொந்த ஊருக்கு E-PASS எடுத்து அனுப்பி வைப்பதாக காவல் துறை மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் நேற்றிரவு நேரடியாக சந்தித்து உறுதி அளித்தார்கள்.

நமது கட்சியின் அப்பகுதியின் பொறுப்பாளர் ஐயா சந்திரசேகர் அவர்கள் தொடர்ச்சியாக என்னுடன் தொடர்பில் இருந்து அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கே நடக்கின்ற நிலவரங்களை தெரிவித்தார். இந்த பிரச்சனை கட்சி தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டு கட்சியின் செய்தி ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ‌Packiarajan Sethuramalingam அவர்களும் இது குறித்து கட்சி பொறுப்பாளர்களோடு இணைந்து பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இன்று காலை நாம் தமிழர் கட்சியின் அப்பகுதி பொறுப்பாளர் ஐயா சந்திரசேகர் அழைத்தார்.

பெண்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்திற்கு பேருந்து புறப்பட்டு விட்டதாக தகவலை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மனம் நிறைந்து நெகிழ்ந்து விட்டது.

ஒரு தகவல் தெரிவித்தவுடன் உடனே செயல்பட்டு இறுதி களத்தில் நின்று உழைத்த அனைத்து எமது நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் மனதார எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடமையை சரியாகச் செய்த அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

கும்பகோணத்திலிருந்து பார்த்தா என்கின்ற நாம் தமிழரை சேர்ந்த ஒரு சிறிய இளைஞன் தெரிவித்த தகவலுக்காக விரைந்து செயல்பட்டு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மீட்டு இந்த நோய்த்தொற்று காலத்திலும் பாதுகாப்பாக கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியில் எதற்காக பயணிக்கிறோம் என்ற கேள்விக்கான பதிலை அடிக்கடி இப்படித்தான் நாம் நமக்கு நாமே அறிந்து கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி.
++++++++++++++++++++++++++++++++++

புதுகை கு.வெற்றிச்சீலன்
மற்றும்
வழக்கறிஞர் மணி செந்தில்
மாநில இளைஞர் பாசறை செயலாளர்
நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response