மதுரை மற்றும் விருத்தாசலத்தில் தனித்தனியாக முழு ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து இன்று காலை நிலவரப்படி மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,077-ஆக உள்ளது.

இந்நிலையில் மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,மதுரையில் முழு பொதுமுடக்கமானது, மேலும் 2 நாட்கள்(ஜூலை 14 தேதி வரை) நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும், திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 14 தேதி வரை நள்ளிரவு வரை முழு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடலூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றுவரை மாவட்டத்தில் 1,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் விருத்தாச்சலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விருத்தாச்சலம் நகராட்சி அறிவித்துள்ளது.

இதில் பால், மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் எனவும் விருத்தாச்சலம் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Leave a Response