புதுச்சேரியை வஞ்சிக்கும் மத்திய அரசு – தமிழ்த்தேசியப்பேரியக்கம் போராட்டம்

கொரோனாவை எதிர்கொள்ள ஒரு ரூபாய் கூட நிதி தராமல் புதுச்சேரியை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ள மோடி அரசைக் கண்டித்து, நாளை (25.06.2020) வியாழன் காலை – புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் கருப்புக் குடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

ஒவ்வொரு நாளும் கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கும் மக்கள் பலியாகி வரும் நிலையில், புதுச்சேரியிலும் அக்கொடுநோய் தீவிரம் பெற்றுள்ளது. இதுநாள் வரை புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிப்புற்றுள்ளனர். நாள்தோறும் பலி எண்ணிக்கையும் பெருகி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் செயலில் உள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மக்களைக் காக்க வேண்டிய கடமை புதுச்சேரி அரசுக்கும், இந்திய அரசுக்கும் உள்ளது. புதுச்சேரி அரசோ தனது ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் கடுமையான நிதிச்சிக்கலில் திணறி வருகிறது. இச்சூழலில், புதுச்சேரிக்கு, இந்த நிமிடம் வரை ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் முழுவதுமாகப் புறக்கணித்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு!

மிகக்குறைந்த கொரோனா நோயாளிகளைக் கொண்ட – புதுச்சேரியை விட சிறிய மாநிலமான மிசோரோமுக்குக் கூட, 30 கோடி ரூபாய் ஒதுக்கிய இந்திய அரசு, புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காததன் காரணம் என்ன?

புதுச்சேரியிலிருந்து ஆண்டுதோறும் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வரித்தொகையாக அள்ளிச் செல்லும் இந்திய அரசு, இந்த கொடுங்காலத்தில் கூட நமக்கு நிதி ஒதுக்காதது, தமிழினத்தின் மீதான இனப்பாகுபாட்டு வன்மம் ஆகும்!

ஜி.எஸ்.டி. வரி நிலுவைத் தொகையைக் கூட வழங்காமல், இந்திய அரசு நடத்துகின்ற இந்த இனப்பாகுபாட்டு வன்மத்தை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய புதுச்சேரி அரசு, நிதி வராததைக் காரணம் காட்டி தனது கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முனைகிறது.

புதுச்சேரியின் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளுக்கு, சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள கபசுரக் குடிநீர் கூட வழங்கப்படுவதில்லை. புதுச்சேரியின் தன்னார்வலர்களுடன் கைகோத்தால்கூட இதை எளிதாகச் செய்ய முடியும்! ஆனால், புதுச்சேரி அரசு தயங்குவது ஏன்?

கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காத இந்திய அரசு, தனது அதிகாரக் கங்காணியான துணை நிலை ஆளுநர் வழியாக புதுச்சேரி அரசுக்கு இந்தச் சூழலிலும் குடைச்சல் கொடுக்க மட்டும் தவறுவதில்லை!

அதுமட்டுமின்றி, மாநில உரிமைகளைப் பறிக்கும் பல்வேறு செயல்பாடுகளில் இறங்கியுள்ளது இந்திய அரசு! பல்லாண்டு காலம் நாம் போராடிப் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை, ஒரு நிர்வாக ஆணை வழியாக, தனது நீராற்றல் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு சென்றுள்ளது இந்திய அரசு. புதுச்சேரியின் மின்சார உரிமையைப் பறித்து, அதை முழுவதுமாக தனியாருக்கு விற்றுள்ளதும், வேளாண் விளைபொருட்கள் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதும் என இந்திய அரசின் தேசிய இன உரிமைகளுக்கு எதிரான சர்வாதிகாரப் போக்கு எல்லை மீறி சென்று கொண்டுள்ளது.

எட்டு மணி நேர வேலைக்காக ஆசியாவிலேயே முதல் போராட்டத்தை முன்னெடுத்து, அதில் வெற்றி பெற்ற மண் புதுச்சேரி. ஆனால், கொரோனா உற்பத்தி முடக்கத்தைக் காரணம் காட்டி, மோடி அரசோ அதை 12 மணி நேரமாக மாற்றி, போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமையை நசுக்குகிறது. அதை புதுச்சேரி அரசு, எவ்விதத் தயக்கமும் இன்றி செயல்படுத்துகிறது!

இதையெல்லாம் கண்டித்துக் குரல் எழுப்பிப் போராட வேண்டிய புதுச்சேரி அரசும், அரசியல் கட்சிகளும் வேடிக்கைப் பார்ப்பது வேதனையானது. நிதி தராமல் புதுச்சேரியை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ள இந்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடாமல், புதுச்சேரியின் எதிர்கட்சிகளும் இந்த அநீதியை வேடிக்கைப் பார்ப்பது சரிதானா?

புதுச்சேரியைப் புறக்கணிக்கும் இந்திய அரசின் இந்த அநீதியைக் கண்டித்தும், புதுச்சேரிக்கு உடனடியாக நிதி ஒதுக்கக் கோரியும், வரும் 25.06.2020 – வியாழன் அன்று காலை 10 மணிக்கு, கருப்புக் குடை ஏந்தி கண்டன முழக்கங்களோடு ஒன்று திரண்டு முழங்க வாருங்கள்!

போராட்டக் கோரிக்கைகள்

1. இந்திய அரசே, உடனடியாக புதுச்சேரிக்கு கொரோனா பேரிடர் நிதி ஒதுக்கு!

2. புதுச்சேரியின் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே விடுவி!

3. புதுச்சேரியின் மின் விநியோகத்தைத் தனியார்மயமாக்காதே!

4. வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் ஆணையைத் திரும்பப் பெறுக!

5. காவிரி ஆணையத்தின் தன்னதிகார உரிமையைப் பறிக்காதே!

6. புதுச்சேரி அரசே, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 10,000 ரூபாய் வழங்கு!

7. கொரேனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்துடன் இணைந்த கூட்டு சிகிச்சை வழங்கு! கபசுரக் குடிநீரைக் கட்டாயமாக்கு!

கருப்புக் குடை ஏந்தி, முகக் கவசம் அணிந்து,கண்டன முழக்கங்களோடு ஒன்று திரள்வோம்!
அவசியம் வாருங்கள், அநீதியைத் தட்டிக் கேளுங்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response