வடமொழிப் பெயர்களையும் மாற்றுங்கள் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…..

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களுக்கான ஆங்கிலப் பெயர் திருத்தப்பட்டியலை வெளியிட தமிழக அரசு முன் வந்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

அதைபோலவே, வடமொழியிலும். பிற மொழிகளிலும் அமைந்திருக்கிற ஊர், ஆறு, மலை ஆகியவற்றின் பெயர்களையும், ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பெயர்களாக மாற்றுவதற்கு முன் வரும்படி அரசை வேண்டிக்கொள்கிறேன்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய தேவாரங்களிலும், பாசுரங்களிலும் தமிழகக் கோயில்களில் உள்ள இறைவன் – இறைவி ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருந்ததை வடமொழிப் பெயர்களாக பிற்காலத்தில் மாற்றிவிட்டனர். இவற்றையும் திருத்தி ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த தமிழ்ப் பெயர்களைச் சூட்டும்படி அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response