
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த இளம்பெண்தான் செங்கொடி.
பேரறிவாளன், முருகன், சாந்தன் இந்த நிரபராதித் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மனு, கடந்த 2011 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ரத்து செய்யப்பட்டு மூவருக்கும் செப்டெம்பர் 9 ம திகதிக்கு தூக்கு என அறிவிக்கப் பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த மூன்று பேரின் தண்டனையை ரத்து செய்யக் கோரிப் போராட்டத்தில் இறங்கினார்கள். சென்னையில் 3 பெண் வழக்கறிஞர்கள் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
அந்த நேரத்தில்தான், காஞ்சீபுரம் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த செங்கொடி என்கிற இளம்பெண், ஆகஸ்ட் 28 ம திகதி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் செங்கொடியின் இந்த அச்சமூட்டும் தற்கொலை,தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த செங்கொடியின் தற்கொலைக்குப் பின்னர்தான், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரானப் போராட்டம் உச்சகட்ட எழுச்சியை எட்டியது என்றே சொல்லலாம்.
அதுவரை மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் அதிகாரம், தன்னிடம் இல்லை என்று சொல்லிவந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனம் மாறினார் என்றும் சொல்லலாம். இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரித் தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் அவர்.
சென்னை உயர்நீதி மன்றம், இந்த மூன்று பேரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆய்வு செய்து, இவர்களின் தூக்கு தண்டனையை 8 வார காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு உச்சநீதி மன்ற விசாரணையில் உள்ளது. இப்படி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட செங்கொடியின் மரணம், மூவரின் வழக்கையும் திசை திருப்பும் அளவிற்கு எழுச்சியையும், மாற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.


