தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யவேண்டியவை ? -பட்டியலிடுகிறார் காசிஆனந்தன்

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ மக்கள் இத்தேர்தலில் வெற்றி பெறச் செய்துள்ளமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ தேசியத்திற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். அதை அழிய விடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருப்பதையே இத் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன.

அதேவேளை நடந்து முடிந்த தேர்தல் எமது மனதில் அச்சம் நிறைந்த தாக்கத்தையும், சிந்தனைகளையும் தூண்டிவிட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒரு இருண்ட காலத்துக்குள், மிகவும் சிக்கல் வாய்ந்த, அதிக நெருக்கடிகள் நிறைந்த, ஆனால் தோற்றத்தில் சமாதான வேடம் தாங்கிய ஒரு யுகத்துக்குள் நுழைகின்றனர்.

இந்நிலையில் ஈழத் தமிழ்த்; தலைவர்களினதும், அறிஞர்களினதும், எழுத்தாளர்களினதும், ஊடகவியலார்களினதும், கலைஞர்களினதும் பங்கும், பணியும் மிகப்பெரியது.

ஆட்சி மாற்றம் என்ற விடயத்தில் சிங்களத் தரப்பான ரணில் தலைமையிலான ஐ.தே.க, மற்றும் சிறிசேன அணியினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே ஒரே இலக்குதான் இருந்துள்ளது. ஆனால் ஏனைய விடயங்களில், இலக்குகளும், நோக்கங்களும் நேர் எதிர்மாறானவையாகவே உள்ளன.

தமிழினத்தை அழித்த இராஜபக்ஷாவை தண்டிக்கவேண்டும் என்பது தமிழர்களினதும், கூட்டமைப்பினதும் நோக்கமாக இருந்தது.

அதேவேளை தனிப்பட்ட ஆட்சி அரச அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி தொடர்பான விடயத்தில் இராசபக்ஷவை வீழ்த்த வேண்டும் என்பதே மைத்திரி, ரணில் கூட்டணியினரது நோக்கமாக இருந்தது.

அது அவர்களுக்கு வெறுமனே தனிப்பட்ட பதவி அதிகாரப் போட்டி மட்டுமே. ஆனால் தமிழர்களுக்கோ அவர்களின் தேசிய இன உரிமைக்கும், வாழ்வுக்குமான ஓர் உரிமைப் பிரச்சனையாக அமைவதுடன் இனப்படுகொலை மற்றும் இன அழிப்புக்கு எதிரான அடிப்படைப் பிரச்சனையாகவும் அமைகிறது.

ஆட்சிமாற்றம் என்ற விடயத்தைத் தவிர எந்த அடிப்படையிலும் சிங்கள அரசியல் தலைமைக்கும், தமிழ்த் தலைமைக்கும் இடையே எந்தவித ஒத்த தன்மையோ, ஒற்றுமையோ கிடையாது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இறைமையுள்ள சமஸ்டியே (கூட்டாட்சி ) தமிழ் மக்களின் கோரிக்கை என முன்வைத்தது.

ஆனால் மகிந்தவோ, மைத்திரி-ரணில் கூட்டணியினரோ தங்களது தேர்தல் பரப்புரையின் போது சமஸ்டிக்கு முறைக்கு எதிராக இருக்கும் ஒற்றையாட்சி முறையின் கீழ்தான் தீர்வு என அழுத்தமாகச் சொன்னார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தினார்கள்.

ஆனால் மகிந்த, மைத்திரி, ரணில், ஜே.வி.பி. உட்பட அனைத்து சிங்களத் தலைமைகளும் உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரையின் போது தமிழீழத்தில் நிலை கொண்டுள்ள இரண்டு லட்சம் படையினரையும் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்கள். ஆனால் சிங்களத்தரப்பு அனைத்தும் தமது தேர்தல் பரப்புரையில் தமிழ் மண்ணில் உள்ள ஒரு படை முகாமைக்கூட தாம் மூடப்போவதில்லை என்றும், அது இராணுவம் எடுக்க வேண்டிய முடிவு என்றும் தமிழர்களின் மிக முதன்மையான கோரிக்கையை புறம்தள்ளினார்கள்.

ஜனாதிபதி தேர்தற் காலப் பரப்புரையும், தற்போது நடந்து முடிந்த தேர்தற்; பரப்புரையும் ஓர் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதாவது மகிந்தாவை ஓர் அரசியல் மாற்றத்திற்காக வீழ்த்த வேண்டும் என தமிழ் மக்கள் விரும்பிச் செயற்பட்டார்கள்.

ஆனால் அவரைத் தோற்கடித்து அந்த இடத்தில் மைத்திரி – ரணில் கூட்டணியினரை பதவியில் அமர்த்திய போதிலும் அதனால் சிங்கள மேலாதிக்க மனப்பான்மையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை என்பதை அவர்களின் தேர்தற் கால நடைமுறைகள் தெளிவாக் காட்டி நிற்கின்றன.

‘ஒற்றையாட்சி முறை தமிழர்களுக்கு தீர்வாகாது’ என்று 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா சொன்னதையும், அண்மையில் தமிழகத்திற்கு வருகை புரிந்த வடமாகாண சபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் ‘ஒற்றையாட்சி முறை தமிழ் மக்களுக்கு தீர்வாகாது’ என்று 67ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சொன்னதையும் நினைவிற் கொண்டு பார்க்கும் போது, இந்த நீண்டகால இடைவெளியின் பின்பும் சிங்களத் தலைவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை எண்ணும் போது ஓர் ஏமாற்றமும், நம்பிக்கையின்மையுமோ எஞ்சுகிறது.

‘வடகிழக்கு மாகாணங்கள் ஓர் அலகு’ என்று 1987ஆம் ஆண்டு இந்திய அரசினால் ஒப்புக்கொண்டிருந்த நிலைப்பாட்டை கருத்தில் கொள்வதுடன் தேர்தல் அறிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்திருந்த ‘சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறமையுள்ள கூட்டாட்சி’ என்ற கொள்கையை அவர்கள் தமது முதல் பணியாக மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மேற்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஓர் அலகாகக் கொண்ட தமிழ் நிலப்பரப்பானது பிரிக்கப்படாது ஒன்றாக இருக்க வேண்டியதுடன், அந்த நிலப்பரப்பானது சிங்களக் குடியேற்றங்களால் சிதைக்கப்படாமலும் இருக்கவேண்டியது தமிழீழத் தேசியத்தினது முழுமுதற் அடிப்படைத் தேவையாகும்.

தமிழ் தேசியத்திற்கு எதிரான முதலாவது அச்சுறுத்தலும், அது எதிர்கொள்ளும் முதலாவது சவாலும் சிங்களக் குடியேற்றங்களாகும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது இதுபற்றி சிங்களத் தரப்பு எதுவும் பேசாது மௌனம் சாதித்துள்ளமை கவலை அளிக்கத்தக்கதாய் உள்ளது.

அதேவேளை சிங்களக் குடியேற்றத்தை நிறைவு செய்து தமிழின அழிப்புக் கொள்கையை முழுமை செய்வதில் கட்சி வேறுபாடின்றி சிங்கள அரசும், சிங்கள அரச இயந்திரமும் இன்;றுவரை உறுதியுடன் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.

நிகழ்ந்து முடிந்த இனப் படுகொலை பற்றிய சர்வதேச விசாரணை, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஓர் அலகாக இருத்தல், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமையுள்ள கூட்டாட்சி, சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துதல், இராணுவ முகாம்களை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்றுதல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவதற்காக அது உலகெங்கும் பரந்து விரிந்துள்ள புலம்பெயர் தமிழர்களை ஒற்றிணைத்து, தமிழகத் தமிழர்களினதும், இந்தியா உட்பட்ட உலகில் உள்ள ஏனைய நட்புச் சக்திகளினதும் ஆதரவை ஒருங்கிணைத்து மேற்படி இலட்சியத்தை அடைவதற்காக பாடுபட வேண்டும் என்று இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம் வேண்டுகிறது.

இவற்றுடன் இராணுவத்தால் தகர்க்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைக்க வேண்டுமென்ற மக்களின் உணர்வு பூர்வமான ஆத்மாத்த விருப்பத்தை பூர்த்தி செயய வேண்டும். இனப்; படுகொலைக்குள்ளான ஒன்றரை லட்சம் மக்களுக்கான நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதுடன் காணாமல் ஆக்கப்பட்டோர்களை கண்டறிந்து விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும். மேலும் போரினால் பாதிக்கபட்ட 90 ஆயிரம் விதவைகளுக்கும் மற்றும் அங்கவீனர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் அப்பால் இராணுவத்திடம் சரணடைந்த அரசியல் தலைவர்களையும், ஏனையோர்களையும் பற்றிய தகவல்களை உடனடியாக பெற்று அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம் ஆவலுடன் வேண்டி நிற்கிறது.

நன்றி!

இவ்வண்ணம், தங்கள் உண்மையுள்ள,

கவிஞர் காசி ஆனந்தன் – தலைவர், இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம்

Leave a Response