பொறுப்பில்லாமல் நடந்து குறுவை சாகுபடியைக் கொன்றுவிடாதீர் – பெ.மணியரசன் கோரிக்கை

குறுவை சாகுபடியைப் பாதிக்கும் வகையில் மேட்டூர் அணையில் மிகையாகத் தண்ணீர் திறக்காதீர் என்று
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

மேட்டூர் அணையிலிருந்து பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக அன்றாடம் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 04.04.2020 லிருந்து 2,500 கன அடி என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இப்போது 102 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த ஆண்டில், அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்தக் கோடையில் இந்த அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த பருவத்தில் மேட்டூர் அணையில் அதிகமாகத் தண்ணீர் தேக்க முடிந்த காலங்களில் மட்டுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடிந்திருக்கிறது. இவ்வாண்டு (2020) குறுவை சாகுபடி செய்வதற்கு டெல்டா உழவர்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இப்பொழுது தேங்கியுள்ள மேட்டூர் நீரை இன்றியமையாத குடிநீர்த் தேவைகளுக்கு அப்பால் வேறு காரணங்களுக்காக அதிகமாகத் திறந்துவிட்டால், கடந்த பல ஆண்டுகள் போல் இவ்வாண்டும் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

கடந்த ஆண்டு (2019) கோடைக் காலத்தில், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்கு மட்டுமின்றி மரபுரிமையற்ற சில பகுதிகளின் கோடை சாகுபடிக்காக நடைமுறை விதிகளை மீறி கடந்த 2019 மே மாதம் 6,000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிட்டதால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனது. இவ்வாண்டும் அந்த நிலை வரக்கூடாது. ஆந்திரப்பிரதேசத்திலிருந்து சென்னைக்குப் பெற வேண்டிய குடிநீரை முழுமையாகப் பெற தமிழ்நாடு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

1,000 கன அடியாகத் திறந்துவிடப்பட்ட தண்ணீரை ஓரேடியாக ஒன்றரை மடங்கு அதிகமாக்கித் திறந்து விடும் காரணங்களை பொதுப்பணித்துறை மக்களுக்கு விளக்க வேண்டும். தவிர்க்க முடியாத குடிநீர்த் தேவைகளுக்கு அப்பால், மரபுவழிப்பட்ட காவிரிப் பாசனத்திற்குப் புறம்பாக, புதிய சாகுபடிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை பொதுப்பணித்துறை கடைபிடித்து, டெல்டா உழவர்கள் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய உதவுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response