மோடியின் உத்தரவை மீறிய உ.பி முதல்வர் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கோவில் கட்டுமானப் பணிகளுக்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கோவில் கட்டுவதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

அயோத்தி ராம ஜென்மபூமியில் பிரமாண்ட கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தப் பணிகள் நிறைவடையும் வரை அங்கிருக்கும் ராமர் சிலையை பக்கத்தில் ஒரு தற்காலிக கோவில் கட்டி அதில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி நெறிமுறை மற்றும் நாடு தழுவிய ஊரடங்கிற்கு இடையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அதிகாலை ராமர் சிலையை மாற்றும் நிகழ்வில் பங்கேற்றார்.கோவில் கட்டுமானத்திற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவிடம் ரூ.11 கோடி காசோலையையும் வழங்கினார்.

சடங்கின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஆதித்யநாத், “ஒரு பெரிய ராமர் கோவில் கட்டுமானத்தின் முதல் கட்டம் இன்று நிறைவடைந்தது, கடவுள் ராமர் ஒரு தார்பாலின் கூடாரத்திலிருந்து ஒரு புதிய இடத்திற்கு மாறிவிட்டார்” எனக் கூறி உள்ளார்.

ஆதித்யநாத்தின் நடவடிக்கை, கொரோனா பாதிப்பிற்கு எதிரான ஒரு சமூக தொலைதூர இடைவெளியின் நெறிமுறையின் ஒரு பகுதியாக மத நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் மோடி விடுத்த வேண்டுகோளுக்கு எதிரானது.

செவ்வாய்க்கிழமை வரை உத்தரபிரதேசத்தில் 37 கொரோனா பாதிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கிற சாமானிய மக்களை விரட்டி விரட்டி லத்தியால் அடிக்கிறது காவல்துறை. ஒரு மாநில முதல்வரே நெறிமுறைகளை மீறியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எனப்பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

Leave a Response