உலகிலேயே மிக உயரமான இயேசு சிலை – இந்து அமைப்புகள் இடையூறு

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள கபாலிபெட்டா என்ற இடத்தில் உலகிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

அந்த சிலை அமையும் நிலத்தை காங்கிரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தில் சிக்கல் இருப்பதாகக் கூறி கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதனால் இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இயேசு சிலை அமைக்கப்படுவதைக் கண்டித்து இந்து அமைப்பினர் சனவரி 13 திங்கட்கிழமை கனகபுராவில் போராட்டம் நடத்தினர். இந்து வழிபாட்டுத் தளத்தில் இயேசு சிலை அமைக்கக்கூடாது என்பது அவர்கள் நிலைப்பாடு என்கிறார்கள்.

நேரடியாக அதைச் சொல்லாமல் நிலம் வழங்கியதில் சர்ச்சை என்று பாஜக அரசு இடையூறு செய்கிறது என்கிறார்கள்.

இதுகுறித்து டி.கே.சிவக்குமார் காணொலி மூலம் கனகபுரா மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது….

கபாலிபெட்டாவில் 400 ஆண்டுகளாகக் கிறிஸ்தவ மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதனால் அங்கு அவர்கள் தேவாலயம் கட்ட இடம் பெற்றுத் தந்தேன். இதேபோல் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்க உதவி செய்துள்ளேன். கனகபுராவின் வளர்ச்சியைக் கண்டு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அதனால் கனகபுராவில் அமைதியைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். கனகபுரா மக்கள் அமைதி காக்க வேண்டும். பிரச்சினையை தூண்டினாலும் பொறுமையை இழக்க வேண்டாம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் இயேசு சிலை அமைக்கப்படும் என்றும் சொகிறார்கள்.

Leave a Response