அமைச்சர் பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்கவேண்டும் – தங்கம் தென்னரசு காட்டம்

திமுகவின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழக அமைச்சரவையில் பொறுப்புள்ள துறையில் அமைச்சராக இருக்கக் கூடியவர், அதற்கும் மேலாக மனிதவள மேம்பாட்டுத்துறை சார்ந்த தொழிலில் வருடத்திற்கு சில ஆயிரம் கோடிகளுக்கு தொழில் வர்த்தகம் செய்கின்றவர், தமிழக அமைச்சரவையில் தானும் ஒட்டிக் கொண்டு இருக்கின்றோம் என்ற இறுமாப்பு தலைக்கேறி ஒரு கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல், தான் வகிக்கின்ற அரசுப் பொறுப்பு மற்றும் தனி நபர் பொறுப்புக்களை எல்லாம் துச்சமென தூக்கியெறிந்து விட்டு, அந்த தலைவரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான, எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டத்தை போகிற போக்கில் அள்ளி வீசி விட்டு, அந்த தலைவரின் தியாக வரலாற்றில் சேற்றினை வாரி இறைக்கும் விதமாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் அனுபவித்த மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்திருக்கின்றார் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.

தலைவர் எனும் சூரியன் மீது ‘இதுகள்” குலைப்பதும் – சேற்றில் உருளும் இத்தகைய ஜந்துகள் கழகத்தை அவ்வப்போது உரசிப்பார்க்க முனைவதெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள தலைமையை எப்படியாவது தாஜா செய்து இன்னும் ஏதாவது பெரிய துறையில் கைவைக்க முடியாதா என்ற அரிப்பின் வெளிப்பாடே ஆகும்.

பாண்டியராஜனின் பேட்டி, வெறும் வார்த்தைகளாக இல்லாது வாய்க்கொழுப்பாக வெளியே வடிந்திருக்கிறது. அரசியல் என்பதே வியாபாரம் என்றும் அதில் தான் இருக்கும் ஒவ்வொரு நாளும் என்ன லாபம் என்று கணக்குப் போடும் பாண்டியராஜனின் கடந்த காலம் போன்றதல்ல தலைவர் தளபதியாரின் வரலாறு. ஏறத்தாழ பொன்விழா காணும் அவரது பொது வாழ்வினைக் கொச்சைப்படுத்தும் தகுதியோ, தரமோ இல்லாத பாண்டியராஜன் தான் கடந்துவந்த அரசியல் பாதையை நினைத்து தன் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்

முதலில் பாஜகவில் இணைந்து அடுத்து ஓராண்டிலேயே தேமுதிகவுக்கு தாவி எம் எல் ஏ ஆகி, பிறகு சாப்பிட்டு நனைத்த கை காய்வதற்குள் தன்னை எம் எல் ஏ ஆக்கிய விஜயகாந்துக்கு துரோகமிழைத்து அதிமுக ஆதரவு அவதாரம் எடுத்து, அடுத்த தேர்தலில் அதிமுகவிலேயே இணைந்து ஆவடி தொகுதி வேட்பாளராகி, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி எம் எல் ஏ ஆகி…. அதற்கு எதிரான வழக்கை இழுத்தடித்துக் கொண்டே…. ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ்ஸோடு சென்று… பிறகு எடப்பாடியோடு ஐக்கியமாகி… அமைச்சராகி… அதிமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அங்கிருந்துகொண்டே பேசுவதற்காக பாஜகவுக்கு தன் வாயை வாடகைக்கு கொடுத்துக் கொண்டு…. தமிழக மக்களுக்கு எதிரான ஜி எஸ் டி, நீட் தேர்வு, தமிழக கலாச்சாரம், பண்பாடு, கல்விக் கொள்கை…. கடைசியாக திருவள்ளுவர் என்று எத்தனை ஆயிரம் வரலாறாக இருந்தாலும் அது தனக்கு அத்துப்படி என்பது போல் கருத்துச் சொல்லி…. பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்ஸின் ஊதுகுழலாக செயல்படுவதற்கு எல்லாம்…. தன் முன்னேற்றத்திற்கு எதையும் – யாரையும் விற்கத் துணிந்த மனநிலை இருந்தால்தான் முடியும்…!

அப்படிப்பட்ட தன்மானமிழந்து அதில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பவரும் – “தியாகம்” என்றாலே என்னவென்றே அறியாத ஒரு “அரசியல் வியாபாரி”யுமான மாபா பாண்டியராஜன், கழகத் தலைவரின் தியாகத்தை, விமரிசிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஆகும்.

பதவிவெறி அவரை இப்படி பேச சொல்கிறது எனக் கடந்து போக இயலாத வண்ணம் நாக்கில் நரம்பின்றி பேசியிருக்கிறார் பாண்டியராஜன். தான் பெற்ற பதவியை தக்க வைத்துக் கொள்ள அவர் பிறரை வேண்டுமென்றே எவ்வளவு வேண்டுமானுலும் புகழட்டும். ஆனால், “கீழடிப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு அல்ல, அது பாரதப் பண்பாடு” என்று வாய்க் கூசாமல் திரித்துச் சொல்லும் “தமிழ்த் துரோகி” பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் என்பதே தமிழ்நாட்டுக்கு தலைக்குனிவு.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களை உசுப்புவது, தூங்குகின்ற புலியை இடறுவதற்கு சமம் என்பதை உணர்ந்து வாய்த்துடுக்கை அடக்கி பாண்டியராஜன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையேல் கழகம் ஜனநாயக வழியில் எப்படி இத்தகைய அடாவடித்தனத்தை எதிர் கொள்ள வேண்டுமோ அதற்கு தயராகவே இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response