அமைச்சர் சி.வி.சண்முகம் தங்கை மகன் தற்கொலை – அதிரவைக்கும் மர்மங்கள்

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது வீடு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டைப் பிள்ளைத் தெருவில் இருக்கிறது. அவரது தங்கை வள்ளி இளங்கோவனின் மகன் லோகேஷ், வயது 26.

22 ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் வள்ளி உயிரிழந்துவிட்டதால் லோகேஷ் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பராமரிப்பில் அவரது வீட்டிலேயே வளர்ந்து வந்திருக்கிறார்.

சென்னை தனியார் கல்லூரியில் E.E.E படிப்பை முடித்த இவர் மேல் படிப்புக்காக சில ஆண்டுகள் ஆஸ்திரேலியா சென்றிருந்தாகக் கூறப்படுகிறது. அங்கு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பிய லோகேஷ், தனது மாமா சி.வி.சண்முகத்தின் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.

தங்கை மகன் என்றாலும் லோகேஷனை தனது மகனாகவே வளர்த்து வந்திருக்கிறார் அமைச்சர் சண்முகம்.நேற்று (அக்டோபர் 6,2019) காலை வழக்கம்போல லோகேஷுடன் காலை உணவை முடித்துவிட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்பிவிட்டார். காலை உணவை முடித்துவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்ற லோகேஷ் 3.30 மணி வரை மதிய உணவுக்கு கீழே வரவில்லை என்று கூறப்படுகிறது.

அறைக்கதவை தட்டிப் பார்த்தும் எந்தப் பதிலும் வராததால் வீட்டிலிருந்தவர்கள் இந்தத் தகவலை அமைச்சருக்குத் தெரிவித்திருக்கின்றனர். உடனே அங்கிருந்த காவலர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உடனே அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கான முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த அவரது உடல் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

3.30 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த தகவல் மாலை 7 மணிக்குத்தான் கசியத் தொடங்கியது. ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் லோகேஷின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்துவரும் காவல்துறை, அவரது நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் வரை பல கதைகள் உலாவரும். அப்படி வெளிவந்திருக்கும் முதல்கதை….

ஜூலை மாதம் வெளியான ஒரு செய்தியில்….

(13.07.2019) திண்டுக்கல்  மாவட்டம் பழனி கோவில் நவபாஷாண முருகன் சிலையை சிலர் கடத்த முயற்சித்ததாக பொன்.மாணிக்கவேல் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் அருங்காட்சியகத்தில் 2009 ல் 31 சிலைகள் காணாமல்போன வழக்கையும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் எஸ்.பி.ராஜாராம் குழுவினர் விசாரிக்கின்றனர். இதில் தொடர்புடைய ஒன்பது பேரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சதீஷ்குமார் 44, சிவசிதம்பரம் 40, சிவா 44, ஆகியோர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து கிருஷ்ணர், காளி, திருமால் உள்ளிட்ட 21 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.  

இதுகுறித்து கூடுதல் எஸ்.பி.ராஜாராம் கூறுகையில், மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ராம்குமார் கிருஷ்ணன் 35, என்பவரை உ.பி நேபாளம் எல்லையான சோனாலி சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் இந்திரா குழுவினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் கைது செய்யவும் மீதமுள்ள சிலைகளை மீட்கவும் விசாரணை நடக்கிறது என்றார்.

பொன்.மாணிக்கவேல் கூறுகையில் வெளிநாடுகளில் 2,000 கடத்தல் சிலைகள் உள்ளன. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரன் அறம்வளர்த்தநாகி சிவன் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் அம்மையார் அறம்வளர்த்தநாயகி, மாணிக்கவாசகர் நடராஜர் சிலைகள் களவுபோயின. 

இதில் நடராஜர் சிலையை ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வாங்கினர். அவர்கள் மீண்டும் வழங்கத் தயராக உள்ளனர். தெய்வ திருமேனியை கொண்டுவர அரசு நிதி வழங்கும்படி முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரனிடம் கேட்டோம். அதற்கான நிதியை அரசு வழங்கவில்லை. சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சொந்தப் பணத்தை செலவு செய்கிறோம். இதுகுறித்து உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்துசமய அறநிலையத்துறையில் இருந்து  பணம் தர வேண்டும். கடுமையான சூழ்நிலையில் பணிபுரிகிறேன். நீதிமன்றம் அதிகாரிகளாக எங்களை நியமித்துள்ளது. ஒரு உதவியாளர் கண்காணிப்பாளர் கேட்டும் தரவில்லை. கார், பெட்ரோல் செலவு எனக்குத்தான் தெரியும். தூக்கத்தை இழந்து வேலை செய்கிறோம். யாரும் உதவி செய்யவும் இல்லை. ஆனால் சொல்ல முடியாத அளவிற்கு நிறைய இடையூறுகள் உள்ளன.

நேபாள எல்லைவரை சென்று சொந்தப் பணத்தை செலவழித்து குற்றவாளியைப் பிடித்துள்ளனர். ஆனால் அரசு பணம் தரமறுக்கிறது. பழனி சிலை வழக்கில் முக்கிய சாட்சியான இணை ஆணையரை வேண்டும் என்றே தண்டிக்கின்றனர். சாட்சிகளை பாதுகாக்க உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன். சாட்சிகள் வரமறுப்பது வருத்தமாக உள்ளது. கோயிலுக்கு போனால் எங்களை பார்த்து ஓடுகின்றனர் என்றார்.

ஜூலை மாதம் பொன்.மாணிக்கவேல் இதைச் சொல்லியிருக்கிறார்.

சிலநாட்களுக்கு முன் அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க செயலாளருமான பொன்முடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில்….

சிலை கடத்தல் வழக்கு விசாரணை நடக்கும் உயர்நீதிமன்ற அமர்வை மாற்ற ஒரு அமைச்சர் முயற்சி செய்தார் என்று பத்திரிகைகளில் எல்லாம் தலைப்புச் செய்தியாக வந்த பிறகு அதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் தெரிந்த பிறகு, அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இப்படி இனம் புரியாத பயத்தில் குளிர் ஜூரம் வருவது இயற்கைதான்.

என்று குறிப்பிட்டிருந்தார்.

1. அமைச்சரின் தங்கை மகன் ஆஸ்திரேலியாவில் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஆறு மாதங்களுக்கு முன் திரும்பினார்.

2.ஆஸ்திரேலியாவிலுள்ள அருங்காட்சியகம் 30 கோடி கொடுத்து நடராஜர் சிலையை வாங்கியதாக பொன்.மாணிக்கவேல் மூன்று மாதங்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறார்.

3.இப்போது சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இனம்புரியாத பயத்தில் குளிர் ஜூரம் வருவது இயற்கை என்கிறார் பொன்முடி.

இம்மூன்று விசயங்களையும் கோர்த்து ஒரு கதை உலவுகிறது.

இதில் உண்மை இருக்கிறதா? வெறும் கதையா? என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும் என்கிறார்கள்.

Leave a Response