நாட்டில் நடைபெறும் கூட்டு வன்முறைக்கெதிராகப் பிரதமருக்குக் கடிதமெழுதிய படைப்பாளிகள் மீதே தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சி, கருத்துச்சுதந்திரத்தையும், சனநாயகத்தையும் புதைகுழியில் தள்ளுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
வன்முறையும், பாசிசமும் தலைவிரித்தாடி சனநாயகத்தின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் நடைபெறும் கூட்டு வன்முறைக்கெதிராகவும், தனிமனிதச் சுதந்திரத்திற்கெதிரான சகிப்புத்தன்மையற்ற போக்கிற்கெதிராகவும் திரைத்துறை, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் எனப் பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த இந்நாட்டின் ஆளுமைகள், படைப்பாளிகள் என 49 பேர் சமூகப் பொறுப்புணர்வோடு பிரதமர் மோடிக்கு முறையிட்டு கடிதம் எழுதியதற்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மாற்றுக்கருத்து தெரிவிப்போரையும், அரசின் செயற்பாட்டை விமர்சிப்போரையும், பேரழிவுத்திட்டங்களை எதிர்த்துக் களம் காணுவோரையும் தேசத்துரோகி, சமூக விரோதி, நகர்ப்புற நக்சல்கள் என விளிக்கிற ஆளும் வர்க்கத்தின் கொடுங்கோல் போக்கு தனிமனிதச் சுதந்திரத்தையும், சனநாயகத்தையும் சவக்குழியில் தள்ளி வரும் நிலையில் நாட்டின் தலைவராக இருக்கிற பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதற்காக படைப்பாளிகள் மீது தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருப்பதையே காட்டுகிறது.
மாட்டிறைச்சியைக் காரணம்காட்டி தாத்ரி தொடங்கி நாடு முழுமைக்கும் நடைபெற்ற படுகொலைகள், ஜெய்ஸ்ரீ எனக் கூறாதவர்கள் மீது கோரத் தாக்குதல், அதற்காகச் சிறுவன் எரித்துக்கொலை, நாடு முழுமைக்கும் நிகழும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் என இந்நாடு வழங்கியிருக்கும் தனிமனிதச் சுதந்திரத்தின் மீதும், மதச்சார்பின்மை மீதும் பாசிஸ்டுகள் கல்லெறிந்து பன்முகத்தன்மையால் கட்டப்பட்டுள்ள இந்நாட்டின் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து அநீதிக்கு நீதிகேட்டவர்கள் மீதே தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்படுகிறதென்றால் நாடு எத்தகையவர்களின் கொடுங்கரங்களில் சிக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் பீகார் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்படி, இவ்வழக்கு இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது. அதுவும் பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்காகத் தேசத்துரோக வழக்கு என்பது கொடுங்கோன்மை ஆட்சி நிலவும் நாட்டில்கூட இல்லாத பெருங்கோடுமையாகும்.
முந்நூறு ஆண்டுகள் இந்நாட்டை அடிமைப்படுத்தி, நமது முன்னோர்களைக் கொடுமைப்படுத்திய வெள்ளையர்களின் ஏகாதிபத்திய காலத்தில்கூட கடிதம் எழுதியதற்காகத் தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டதாகச் செய்தியில்லை.
விடுதலைபெற்ற இந்தியாவில் அநீதிக்கெதிராகப் பிரதமருக்கு முறையிட்டுக் கடிதம் எழுதியதற்கே தேசத்துரோக வழக்குப் பாய்கிறதென்றால் இதுதான் பாஜக உருவாக்க எத்தனித்த புதிய இந்தியாவா? என்கிற கேள்வி எழுகிறது.
ஆசீபா எனும் பச்சிளம் சிறுமியை கோயிலின் கருவறைக்குள் பல நாட்களுக்கு வைத்து கூட்டு வன்புணர்ச்சி செய்து கொன்றவர்கள் மீதும், அந்தக் கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக நாட்டின் கொடியை ஏந்திப் போராட்டம் செய்தவர்கள் மீதும் பாயாத தேசத்துரோக வழக்குப் படைப்பாளிகள் மீது பாய்கிறதென்றால் இவ்வதிகாரமும், ஆட்சியும் யாருக்கானது?
நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து மக்கள் வறுமை, ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அத்தகைய கொடிய நிலைக்கு நாட்டைத் தள்ளியவர்கள் மீதெல்லாம் பாயாத தேசத்துரோக வழக்கு இவர்கள் மீது மட்டும் ஏன் பாய்கிறது?
கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி சேமித்த பணத்தையெல்லாம் வாராக்கடனாக அபகரித்துக்கொள்ள தனிப்பெரு முதலாளிகளுக்கு அள்ளித் தந்த ஆட்சியாளர்கள் மீது பாயாத தேசத்துரோக வழக்கு மண்ணின் மக்கள் மீது மட்டும் எதற்காகப் பாய்கிறது?
கடிதம் எழுதியதற்கே தேசத் துரோக வழக்கைப் பாய்ச்சுவார்களென்றால் போராடிப் பெற்ற சுதந்திரமும், சனநாயகமும் எங்கிருக்கிறது?
இந்நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர் பிரதமர் மோடிதானே! அநீதிக்கு அவரிடம் முறையிட்டு நீதிகேட்பதுதானே முறை? அதுதானே சனநாயகம்? அதைச் செய்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கெதற்கு?
கடிதம் எழுதியதற்குத் தேசத்துரோக வழக்கென்பது மன்னராட்சிக் காலத்தில்கூட இல்லாத மாபெரும் அடக்குமுறையாகும். பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்காக படைப்பாளிகள் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது இந்திய சனநாயத்தின் மீது விழுந்த பேரிடி. இதன்மூலம் சனநாயகமும், கருத்துச்சுதந்திரமும் புதைகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது.
நாட்டில் நடைபெறும் வன்முறைகளையும், அநீதிகளையும் சகித்துக் கொள்ள முடியாத படைப்பாளிகள் பொறுப்புணர்ச்சியோடு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதற்காக தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது தேசத்துரோக வழக்கைத் தொடுத்திருப்பது இந்நாட்டின் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டக் கோரத்தாக்குதல்; சனநாயகத்தன்மையற்ற அரசப்பயங்கரவாத நடவடிக்கை; இந்திய நீதித்துறை வரலாற்றின் மிக மோசமான முன்னுதாரணம்.
எனவே, படைப்பாளிகள் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெற்று, அவர்களின் கோரிக்கையில் இருக்கும் தார்மீக நியாயத்தை ஏற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.