விக்கிரவாண்டியில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அதிமுக – சீமான் குற்றச்சாட்டு

அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

முதலாம் நாளான நேற்று 05-10-2019 சனிக்கிழமை, மாலை 05 மணியளவில், விக்கிரவாண்டி வேட்பாளர் கு.கந்தசாமியை அறிமுகப்படுத்தும் அறிமுகப் பொதுக்கூட்டம், விக்கிரவாண்டி. வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இதில் சீமான் வேட்பாளர் கந்தசாமியை அறிமுகம் செய்துவைத்து பேசியதாவ்து…

ஒன்றரை கோடி மக்கள் உள்ள சிங்களர்கள் தனி நாடு, தனி இராணுவம் வைத்து வாழ்கின்றனர். ஆனால் 13 கோடி பேர் உள்ள தமிழர்களுக்குத் தனியாக ஒரு தேசம் கூட இல்லை.

அறிவை உலகிற்குக் கடன் கொடுத்த மக்கள், இன்று அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு ஒரு தலைவனாக பிரபாகரன் வந்தார். அடிமையாய் வாழ்வதை விட உரிமையாய் சாவது மேலானது. அதைக் காட்டிலும் சுதந்திரமாக போராடி வாழ்வது மேலானது என்று கற்பித்தார்.

பா.ஜனதாவின் கிளைக் கழகங்களாக தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை, அனைத்தும் பறிபோய் விட்டது. 90 சதவீத தமிழர்கள் அழிந்து போய்விட்டனர்.

தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்று கூறி நீட் தேர்வை அறிமுகப்படுத்தினர். ஆனால் இன்று ஆள்மாறாட்டம் உள்பட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு போலி மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இயக்குநர் மணிரத்தினம் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கு ஆகும்.

தேர்தல் பணிக்காக கூட்டணிக் கட்சிகளுக்கு நிதி வழங்கிய தி.மு.க.வுக்கு, அந்தத் தொகை எங்கிருந்து வந்தது. இவர்களது தேர்தல் செலவுகளில் தங்களது சொந்த தொலைக்காட்சிகளுக்கே விளம்பரம் செய்தவகையில், செலவு செய்ததாகக் கணக்குக் காட்டுகிறார்கள்.

நூறுநாள் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயத்தை அழித்து விட்டனர். இந்தியை தமிழில் எழுதி படிக்கச் சொல்கிறார்கள். நமக்கு அதைப் படிக்கும் போது அதன் பொருள் தெரியாது. ஆனால் எதற்காக இந்த முறையில் இந்தியைப் படிக்கக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ் தான் பேச வேண்டும், எனவே இந்தியைக் கொண்டு வரக்கூடாது.

எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் அதன் கதவை சின்ன ஒரு திறவுகோலால் தான் திறக்க முடியும். அதேபோல் இந்த அமைப்பில் இருந்து ஒருவரை நீங்கள் வெற்றி பெறச் செய்தாலும், நமக்கான புதிய விடியல் பிறக்கும்.

அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பது தான் எங்களது கொள்கையாகும். இதைத் தான் எங்களது தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளோம்.

எனவே எங்களது வெற்றி வேட்பாளர் கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஆளுங்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆகையால் அனைவரும் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response