கலைஞர் தொலைக்காட்சி இப்படிச் செய்யலாமா? – சுபவீ வருத்தம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீ இன்று வெளியிட்டுள்ள பதிவில்….

மரணம் சொல்லிவிட்டு வருவதில்லை!
————————————————————-
கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய காலத்திலிருந்து, காலை நிகழ்ச்சியான விடியலே வா பகுதியின் ஒரு பகுதியாக, நான் உரையாற்றும் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 17.09.2007அன்று தொடங்கிய அந்த நிகழ்ச்சி 26.09.2019 அன்றுடன் நிறுத்தப்பட்டு விட்டது.

என் உரை மட்டுமின்றி, விடியலே வா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு விட்டன என்று அறிந்தேன்.

எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஓரே நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்க முடியாது. அது பார்வையாளரிடையே சலிப்பை ஏற்படுத்தும். புதிய புதிய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இனி ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில், மக்கள் விரும்பும் திரைப்படம் ஒளிபரப்பாகக்கூடும் என்று கூறினார்கள்.

பார்வையாளர்களுக்கு அது ஒரு நிகழ்ச்சி மட்டுமே. ஆனால் 12 ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியோடு தொடர்ந்து பயணித்த எனக்கு, அது வாழ்வின் ஒரு பகுதி! அந்தப் பகுதிதான் என்னை மிகப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. எனக்குள் இருக்கும் செய்திகளையும், சிந்தனைகளையும் நான் உலகினரோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது. நான் படிக்கும் நூல்களை, அவற்றின் சிறப்பை அனைவரோடும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு என்றும் நான் நன்றி உடையவனாக இருப்பேன்!

அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுவிட்ட இந்தப் பொழுதில், அந்தப் பனிரெண்டுஆண்டுப் பயணம் குறித்த ஓர் அசைபோடலே இந்தப் பதிவின் நோக்கம்.

பொதுவான செய்திகள், இலக்கிய இன்பங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற பலவற்றை அப்பகுதியில் கூறிவந்தாலும், நான் உயிராய் நேசிக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளை, அது தொடர்பான பழைய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வெளிப்படுத்துவதற்கே, அப்பகுதியைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டேன்.

புகழ் பெற்ற பெரியவர்கள் தொடங்கி. ஏழை எளிய மக்கள் வரையில் பலரையும் அப்பகுதி சென்றடைந்தது. மறக்க முடியாத ஓர் அனுபவத்தை இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. ஒருமுறை, திருப்பூரைச் சேர்ந்த, எங்கள் அமைப்பின் உறுப்பினரான, மறைந்த நண்பர் மாப்பிள்ளை ராஜா, சென்னை தாம்பரம் சானடோரியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைக் காண அங்கு சென்றபோது, அங்கே குப்பை கூட்டிக் கொண்டிருந்த இரண்டு, மூன்று பேர் ஓடிவந்து, ” நேரம் கிடைக்கிற அன்னிக்கு, கலைஞருல நீங்க பேசுறத கேப்போங்கய்யா. எங்களுக்கு ஒங்க பேச்சு ரொம்பப் பிடிக்கும்” என்றார்கள். அந்த நிமிடத்தை என்னால் மறக்கவே முடியாது.

நாள் தவறாமல் செய்தியைக் கேட்டுவிட்டுத் தொலைபேசியில் கருத்து சொன்ன மறைந்த எழுத்தாளர் வீரண்ணன், இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிற நண்பர் மானம்பாடி புண்ணியமூர்த்தி, அய்யா சின்னமனூர் சோமசுந்தரம் ஆகியோர் என்றும் நன்றிக்குரியவர்கள். நீங்கள் இன்றுவரையில் சொல்லியுள்ள (ஏறத்தாழ) 3000 செய்திகளில் 2000 செய்திகளையாவது, என் ஏட்டில் தேதியோடு குறித்து வைத்துள்ளேன் என்று அண்மையில் கூறிய, தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அஜித், கேட்பதோடு மட்டுமின்றி, அதனைத் தட்டச்சு செய்தும் அனுப்பி உதவுகின்ற என் பிள்ளை ஆங்கரை பைரவி அனைவருக்கும் இந்நேரத்தில் அன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். விரித்தால், அந்தப் பட்டியல் இன்னும் பெருகிக் கொண்டே போகும்!

இப்படிப் பல்வேறு நிகழ்ச்சிகள்! எல்லாப் புகழும் கலைஞர் தொலைக்காட்சிக்கே!

எல்லாவற்றையும் தாண்டி, ஒன்றே சொல் நிகழ்வில் நான் கூறிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து நூலாக ஆக்கியபோது (இதுவரையில் ஆறு தொகுதிகள் வவெளிவந்துள்ளன) தலைவர் கலைஞர் அவர்களிடம் ஓர் அணிந்துரை கேட்டேன். அப்போது அவர் முதலமைச்சர். ஆயிரம் பணிகள் அவர் முன்னால்! ஆனாலும் இரண்டே நாள்களில், 26.03.2009 அன்று அவர் தந்த அணிந்துரை இது:-

கலைஞர் தொலைக்காட்சியில், காலை வேளையில்
எந்தவொரு நிகழ்ச்சியை நான் பார்த்தாலும்- பார்க்கா
விட்டாலும், தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் “ஒன்றே
சொல், நன்றே சொல்” நிகழ்ச்சியைப் பார்க்கத்
தவறுவதில்லை

அவர் நம்மை அழைத்து, ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ எனச்
சொல்வது, ஒரு சொல் அல்ல, அது ஒரு வைரக் கல்! ஆம்,
பட்டை தீட்டப்பட்ட்ட வைரக் கல்!

பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து – தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை
நோய் தீர்க்கும் மருந்து!

வரலாறுகளைப் புரட்டி – அவர் நம் கண் முன்னால் விரித்து
வைக்கும் செய்திகள், நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத
விருந்து!

அழகான தமிழ் – ஆணித்தரமான குரல் -, அடுக்கடுக்கான
உண்மைகள் , அத்தனையும் அறிவுக்கடலின் ஆழத்திலிருந்து எடுத்த முத்துகள்!

அந்த முத்தாரம் அணிந்து – தொலைக்காட்சியில் தம்பி
“சுபவீ” எப்ப்போது தோன்றுவாரென்று, நான் நாள்தோறும் காலை நேரத்தில் எதிர்பார்க்கிறேனே, அதுதான் அவரது
கருத்துகளைத் தாங்கி வெளி வரும் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற இந்தத் தொகுப்புக்கு நான் எழுதிய
சிறப்புரை என்று வைத்துக் கொள்ளலாம்.”

என்றும் அன்புள்ள
(ஒ-ம்) மு. கருணாநிதி

இந்தப் பாராட்டு மடலை விட, இனி என் வாழ்வில் நான் பெறப்போகும் பெரிய சான்றிதழ் வேறு ஒன்றும் இருக்க முடியாது. .

எனினும் நெஞ்சில் ஒரு சின்ன வலி இருக்கிறது. 12 ஆண்டுகள், திங்கள் முதல் வெள்ளி வரையில் இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த என்னை ஒருமுறை நேரில் அழைத்து, நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியுள்ளது அல்லது சில காலம் இந்த நிகழ்வை ஒத்தி வைக்க வேண்டியுள்ளது என்று சொல்லியிருக்கலாமே என்று தோன்றுகிறது. .

சரி, மரணம் சொல்லிவிட்டு வருவதில்லை! அப்படி வந்தால் அதற்குப் பெயர் மரணமில்லை!!

-சுப. வீரபாண்டியன்

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response