பின்லாந்து சென்ற செங்கோட்டையன் இதைத்தான் கற்று வந்தாரா? – தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம்

தமிழகத்தில் ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு தமிழக அரசு உத்தரவு – தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம். உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்என வலியுறுத்தல்.

ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கை மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதோடல்லாமல், சிறார்களின் மீது கூடுதல் பொதுத்தேர்வுகள், கூடுதல் மொழிகள் என சுமையையும், மனஅழுத்தத்தையும் ஏற்றி ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் கல்வி கற்றலை ஒழிக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என தமிழகத்தில் எதிர்ப்புகளும், கண்டனங்களும், போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்
ஒன்றிய அரசு அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி உரிமைச் சட்டம் எனக் கொண்டு வந்ததில் 2019 திருத்தப்படி ஐந்து, எட்டு வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக தமிழக அரசு 13.09.2019 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டே ஐந்து, எட்டு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தத் துவங்க வேண்டும் என்றும், முதல் மூன்று வருடங்களுக்கு மட்டும் அந்த முடிவுகளின் அடிப்படையில் அதே வகுப்பில் நிறுத்த வேண்டாம் என்றும் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாகவே பல முன்மாதிரி நலத்திட்டங்களைக் கொண்டு வந்து மாணவர்களின் படிப்பு விகிதத்தை உயர்த்தி உள்ளனர். கல்வி கற்றோரின் விகிதமும் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது.

அதற்கு மதிய உணவுத் திட்டம், இலவசக் காலணி, புத்தகப் பை, நோட்டுப் புத்தகங்கள், பேருந்து பயணம், மிதிவண்டி, மடிக்கணினி, கல்வி உதவித் தொகை, அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள் என பல சமூக நலத் திட்டங்களும் அனைவருக்கும் கல்வி, அருகாமைக் கல்வி, மேனிலைப் பள்ளிகள் வரை பள்ளிகள் பரவலாக்கம் போன்ற பல சமூக அக்கறையுள்ள திட்டங்களாகும்.

அதே போல உயர்கல்வி பயில்வோர் விகிதம் நாட்டின் சராசரியை விட இருமடங்காகவும், ஒன்றிய அரசு 2030 இல் இலக்கு எனச் சொல்லப்படும் இலக்கை கிட்டத்தட்ட நெருங்கியும் சாதித்துள்ளது.

நாட்டிலேயே அதிக கலை அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் உள்ளதும், தொழில்துறை, மென்பொருள் துறை, பிபிஓ எனப்படும் சேவைத்துறை என அனைத்து வகை தொழில்களுக்கும் ஏற்ற வகையில் திறமையான மாணவர்களை வளர்த்துள்ளதும் தமிழகம் தான்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை, மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளது. மருத்துவ சுற்றுலாத் தலைநகராக சென்னை உருவாகியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுகளை நீக்கி ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் மருத்துவம், பொறியியல் படிப்புகள் படிக்க வாய்ப்புகளைத் தந்துள்ளது.

இவ்வாறு கல்வித்துறையில் ஏற்கெனவே பன்மடங்கு வளர்ந்துள்ள தமிழக கல்வியைச் சீர்குலைக்கவும், தமிழகக் கல்லூரிகளை அனைத்து இந்திய மாணவர்களுக்குத் திறந்துவிட்டு தமிழர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் விதமாகவே ஒற்றை இந்தியா என நீட் உள்ளிட்ட தேர்வுகளும், தற்போது புதியக் கல்விக் கொள்கை என கொள்ளை, மாநில உரிமைப் பறிப்புத் திட்டத்தை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.

புதியக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு நிலையிலேயே இருக்கும் போது, மேலும் தமிழகத்தில் பரவலாக எதிர்ப்புகள் வலுத்து வரும் போது, தமிழக அரசு அவசர அவசரமாக இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மக்கள் விரோத எடப்பாடி தலைமையிலான இந்த அரசு மோடி அரசின் ஆதரவுடனேயே சட்ட விரோதமாக ஆட்சியிலுள்ளது. எந்த அரசியல் நெறிமுறையும் இல்லாமல் மத்திய அரசின் கருணையுடன் மட்டுமே இந்த அரசு நீடித்து வருவதால் அவர்கள் சொல்வது மட்டுமல்ல, மனதளவில் நினைக்கும் செயல்களைக்கூட இவர்கள் நிறைவேற்றி மோடி அரசை மகிழ்விப்பதிலேயே குறியாக இருந்து தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு தமிழகத்தை அடகு வைத்துள்ளனர்.

அந்த வழியிலேயே ஜெயலலிதா எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், மீத்தேன்/ஹைட்ரோகார்பன், நீட் உள்ளிட்ட தமிழக விரோத , உரிமைப் பறிப்பு திட்டங்களை ஏற்றுக் கொண்டனர்.

தமிழக அரசு வேலைகளுக்கான பணியாளர் தேர்வுகளையும் எந்த மாநிலத்தவரும் எழுதலாம் என திருத்தினர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் மோசடியாக முழுக்க முழுக்க வடமாநிலத்தவர் பணியமர்த்தப்படுவதை வேடிக்கை பார்த்து வருகின்றனர். கட்டுக்கடங்கா வடமாநிலத்தவர் குடியேற்றத்தை கவனியாதுள்ளனர்.

ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது பள்ளி மாணவர்கள் மீதான வன்முறையாகும். மேலும் இது மாணவர்கள் இடைநிற்றலை அதிகப்படுத்தி அவர்களின் கல்வியில் மண்ணள்ளிப் போடுவதாகும்.

1952 முதல் பொதுத் தேர்தல் துவங்கி இந்திய தேசியம் பேசும் கட்சியைப் புறக்கணிக்கத் துவங்கி 1967 இல் முதல் இந்திய தேசியக் கட்சிகளை ஒதுக்கி வைத்த வரலாறு கொண்டது தமிழகம்.

மாநில சுயாட்சி என முழங்கியது தமிழகம். தன் தனித்துவ சிந்தனையால், செயல்பாட்டால், அடையாளத்தால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டு அடிப்படையில் இந்தியாவிலேயே மிக அதிகம் வளர்ந்து அனைத்திலுமே முதலிடத்தில் தமிழகம் உள்ளது.

வட இந்தியாவிலிருந்து மூன்றில் ஒருவர் தென்னகத்திற்கு குடிபெயர்கிறார்கள் அதில் மிக அதிகளவில் தொண்ணூறு சதவீதம் பேர் தமிழகத்தில் குடிபெயர்கின்றனர் என புள்ளிவிவரங்கள் சொல்கிறது.

தமிழகத்தை இந்தியா தான் பின்பற்ற வேண்டுமே ஒழிய இந்திய திட்டங்கள் தமிழகத்தை முப்பது நாற்பது வருடத்திற்கு பின்னோக்கி இழுத்துவிடும், தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றும் திட்டங்களாகவே உள்ளன.

மாநில சுயாட்சி பேசிய அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி, அந்த அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடக்கும் சூழ்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது மாபெரும் வஞ்சகமாகும்.

உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட பின்லாந்திற்குச் சென்று அதைப் பார்த்து, சிறந்த வழிமுறையைப் பின்பற்றுவோம் எனக்கூறிய கல்வி அமைச்சர் இதைத்தான் கற்றாரா?.

எந்தக் கல்வியாளர்கள் தந்த பரிந்துரையைக் கொண்டு திடீரென்று இந்த திருத்தத்தை கொண்டு வருகிறார்கள்?. நாக்பூரில் பயின்றவர்களா?.

தமிழக அரசே
உடனடியாக இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறு.
அறிவியல்பூர்வமான குழந்தைநல, மானுடநலக் கல்வியை வளர்த்தெடுக்க நடவடிக்கை எடு.

தன்னாட்சித் தமிழகம்
14.09.201

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response