ஐந்தாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு – தமிழக அரசு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கும் நிலையில் தற்போது 5 வது மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவு:

“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி கல்வி உரிமைச் சட்டம் (2009) மைய அரசால் இயற்றப்பட்டு ஏப்ரல் -1-ம் தேதி 2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து அரசாணை எண் 173 பள்ளிக்கல்வித்துறை நாள் 8-11-2011 -ல் இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் இச்சட்டத்திற்கு மைய அரசால் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன தற்போது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009) க்கு மேலே இரண்டாவதாக பறிக்கப்பட்ட திருத்தச் சட்டத்தில் கீழ்கண்டவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி தொடர்ச்சியாக ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்பு களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்துவது.

புதிய திட்டத்தின்படி ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் 2 மாதத்திற்குள் தேர்வு எழுதி பாஸாகி அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவர்.

2 மாதத்திற்குள் மீண்டும் வைக்கப்படும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விலும் தேர்ச்சியடையாத மாணவர்களை தேர்வில் தோல்வி என அறிவிக்க பள்ளிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் பழைய வகுப்பிலேயே படித்து அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று அடுத்த வகுப்புக்கு போகலாம்.

ஆனால் தேர்ச்சி அடையாத மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற பள்ளிகளுக்கு உரிமையில்லை. அதேபோன்று கட்டாய கல்வி சட்டத்தின்படி 5-ம்,வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு கட்டாயத்தேர்ச்சி உண்டு”.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணையில் கூறப்படுவதாவது:

இந்த சட்டத்திருத்தமானது கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக மேலே மூன்றாவதாக பறிக்கப்பட்ட மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019-ன் படி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் 201-19 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் அரசு பொது தேர்வு நடத்துவதற்கான அனுமதியை அரசின் ஒப்புதலை தொடக்க கல்வி இயக்குனர் ஏற்கெனவே கோரியுள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்தினை அரசு பரிசீலனை செய்து, அதனை ஏற்று 2019-2020-ம் கல்வி ஆண்டிலிருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்திட தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்தும், தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு ஆணையிடுகிறது.

அதற்கான அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response