கவிழ்ந்தது கர்நாடக அரசு

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரசுக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 உறுப்பினர்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

மேலும் 2 சுயேச்சை உறுப்பினர்களும் கூட்டணிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117 இலிருந்து 101 ஆகக் குறைந்தது.

கடந்த 12 ஆம் தேதி கர்நாடக பேரவை கூடியது. அப்போது முதல்வர் குமாரசாமி, தானாகவே முன்வந்து தனது அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜூலை 18 ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த வியாழக்கிழமை சபை கூடியதும், நம்பிக்கை தீர்மானத்தின் மீது முதல்வர் உள்பட 20 உறுப்பினர்கள் பேச வேண்டியிருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க கோரினர்.

இவ்வாறு அடுத்தடுத்த நாளும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது உறுப்பினர்கள் பேசுவதும் அமளியில் ஈடுபட்டு சபையை ஒத்திவைப்பதுமாக நீண்டு கொண்டே சென்றது.

இந்நிலையில் அதிருப்தி உறுப்பினர் ராமலிங்கரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்து பேரவையில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை கவர்னர் வஜூபாய் வாலா, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே முடிக்க வேண்டும் என்று இரண்டு முறை முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். ஆனால் அதையும் கூட்டணி அரசு நிராகரித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சபை கூடியதும், நம்பிக்கை தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசினர்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் கால அவகாசத்தை நீட்டிக்கும் முயற்சியில் மஜத-காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவு வரை அவை நடவடிக்கை தொடர்ந்தது.

இறுதியில் நேற்று (ஜூலை 23) மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கெடு விதித்து அவையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது; நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதாக உறுதியளித்துள்ளதால் புதன் கிழமை மனுவை விசாரிப்பதாகக் கூறி ஒத்திவைத்தனர்.

இதையடுத்து அதிருப்தி உறுப்பினர்கள் சார்பில் அவரது வழக்குரைஞர், சபாநாயகர் ரமேஷ்குமாரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அவர்கள் ஆஜராக 4 வார காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் பேச துவங்கினார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பணம், அமைச்சர் பதவி என்று பாஜகவினர் ஆசைவார்த்தை கூறி அவர்களின் அரசியல் எதிர்காலத்தையே பாழாக்கிவிட்டார்கள் என்றார்.

இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேசிய காங்கிரசு சட்டமன்றத் தலைவர் சித்தராமையா, ‘‘குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்களை கடத்தி சென்று மும்பை சொகுசு ஓட்டலில் அடைத்து வைத்திருக்கும் பாஜகவின் செயலால் ஜனநாயகத்தின் மாண்பே உயிரிழந்துவிட்டது’’ என்றார்.

இறுதியாக நம்பிக்கை தீர்மானத்தின் மீது குமாரசாமி பேசியதாவது:

நான் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நான் தயார். சபையில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியல்ல. நான் அளித்த வாக்கை காப்பாற்றுவேன். வாக்கெடுப்பை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இதற்காக சபாநாயகர் மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது முதல்வர் பதவியை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். நான் அரசியலில் நுழைந்ததே விபத்து தான். முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சபாநாயகர் அளித்த மாலை 6 மணி கெடு முடிந்தும் தனது உரையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்துவிடுவேன் என்று வாக்களித்துள்ளேன். எனவே உரையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று கூறிவிட்டு, சற்று நேரத்தில் தனது உரையை முடித்துகொண்டார்.

இதையடுத்து 7.15 மணி வாக்கில் சபாநாயகர் ரமேஷ்குமார், குரல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். சட்டப்பேரவை கதவுகள் மூடப்பட்டன.

பின்னர் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் வரிசையாக எழுந்து நின்றனர். அவை செயலாளர்கள் ஒவ்வொரு வரிசையாக சென்று அவர்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

பின்னர், பாஜக உறுப்பினர்கள் டிவிசன் முறையில் வரிசையாக எழுந்து நின்றனர். அவர்களது வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

பதிவான வாக்குகளை பேரவையில் சபாநாயகர் ரமேஷ்குமார் படித்தார். அதில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 99 உறுப்பினர்கள் இருந்தனர். பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் இருந்ததால், குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்.

இதனால் மஜத-காங்கிரசு 14 மாத கூட்டணி ஆட்சி கர்நாடக மாநிலத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து பேரவையில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு பேரவை நிறைவு செய்யப்பட்டது.

Leave a Response