விண்ணில் பாய்ந்தது சந்திராயன் 2 – இஸ்ரோ சாதனைகளுக்கு இதுதான் காரணம்

நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் செய்யப்போகிறது.

இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுண்ட்டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து இன்று ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என கூறியுள்ளார்.

சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றும் கூறினார்.

இந்நிலையில், கிரையோஜெனிக் ஸ்டேஜ் (சி25)ல், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதன்பின் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சந்திரயான்-2 ஏவுகணை வெற்றிகரமுடன் விண்ணில் இன்று ஏவப்பட்டுள்ளது.

இந்த வெற்றியை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழின உணர்வாளர் கலைவேலு இதுபற்றிக் கூறியிருப்பதாவது….

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. நம் தமிழர் சிவன் உட்பட அனைத்து அறிவியலாளர்களையும் வாழ்த்துவோம்.

அறிவியலின் பிற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் பெரிதாக ஏதும் இல்லாமல் இந்தியா பின்தங்கியிருக்க, இஸ்ரோ மட்டும் உலகமே வியக்கும்வண்ணம் சாதனைமேல் சாதனைகள் புரிவது எப்படி?

இந்தக் கேள்விக்குச் சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூர்த் தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் உரையாற்றியபோது அப்போது சந்திரயான் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு விளக்கம் தந்தார்:

“நான் உட்பட இஸ்ரோவில் பணியாற்றும் பெரும்பான்மையான அறிவியலாளர்கள் பள்ளிக்கல்வியை அவரவர் தாய்மொழியில் பயின்றவர்கள; அதன் காரணமாக இயல்பாகவே படைப்பாக்கத் திறன் பெற்றவர்கள். இஸ்ரோ வெற்றிக்கு அதுவே காரணம்.”

அண்ணாதுரை போலவே இன்று இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சிவன் அவர்களும் தம் தொடக்கக்கல்வியையும் பள்ளிக்கல்வியையும் அரசுப்பள்ளியில் தம் தாய்மொழியாம் தமிழில் நிறைவு செய்தவர். இது எவ்வளவு பெரிய பெருமைக்குரிய உணர்ந்து தெளிவுபெற வேண்டிய செய்தி.

ஆங்கில மாயையில் சிக்கிச் சீரழியும் அப்பாவிப் பெற்றோர்கள் சிந்திப்பார்களா?

Leave a Response