இரகசியமாக நடந்த கருத்து கேட்பு – தடுத்து நிறுத்திய தமிழர்கள்

தமிழ்த் தேசியப் பேரியக்கம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….

மோடி அரசு கொண்டுவந்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”-இன் மீது ஆங்காங்கு நடுவண் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் – ஆசிரியர்களை வைத்து, “கருத்துக் கேட்புக் கூட்டம்” என்ற பெயரில் இரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையிலும், திருச்சியிலும் இதுபோல் நடத்தப்பட்ட கூட்டத்தை தமிழின உணர்வாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், இன்று (22.06.2019) காலை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் ஒரு அறைக்குள் எந்த வித அறிவிப்புப் பலகை ஏதுமின்றி, இக்கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெற்றோர்களோ, மாணவர்களோ அனுமதிக்கப்படாத நிலையில், கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் ஆசிரியர்களும் அதிகாரிகளும் அக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, தந்தை பெரியார் தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் குமரன் மற்றும் தோழர்கள், தமிழர் விடியல் கட்சி தோழர்கள் என தமிழின உணர்வாளர்கள் அரங்கில் நுழைந்து இந்த அநீதியை எதிர்த்துக் கேள்வி எழுப்பினர்.

மாணவர்களோ, பெற்றோர்களோ இல்லாமல் எப்படி கருத்துக் கேட்கிறீர்கள் என்று வாதிட்ட தோழர்கள், ஒரு கட்டத்தில் இக்கூட்டத்தை இரத்து செய்யும் வரை கலைய மாட்டோம் என அரங்கிலேயே தரையில் அமர்ந்தனர். இதனையடுத்து, கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2019 – கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்ப கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்..!

https://www.change.org/p/ministry-of-human-resource-develop…

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response