
மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாளான நவம்பர் ஒன்றாம் நாளை தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றன. கர்நாடக அரசு சார்பில், கர்நாடக ராஜ்யோத்சவா தினவிழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று இவ்விழா நடைபெற்றது. விழாவில் கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, கன்னடத் தாய் புவனேஸ்வரியின் சிலைக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–
“காவிரிப் பிரச்சினையில் நமது மாநிலத்தின் நலனைக் காக்க நாங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடந்து கொண்டோம். காவிரி நீரை பாதுகாக்க நாங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்பதை மாநில மக்கள் அறிந்து வைத்துள்ளனர். சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அணைகளில் உள்ள தண்ணீர், குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். வேறு நோக்கத்திற்கு தண்ணீரை திறந்துவிட மாட்டோம் என்று கூறினோம்.
இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில மக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகத்தின் நிலம், நீர், மொழியைப் பாதுகாப்பேன் என்று ஒவ்வொரு கன்னடரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இதுவரை நாம் நடத்திய போராட்டங்கள் குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நவம்பர் மாதம் 1–ந் தேதி மட்டும் கன்னட மொழி மீது பற்றைக் காண்பித்தால் போதாது. நமது மாநிலம், கலாசாரம், உரிமைகளைப் பாதுகாக்க ஆண்டு முழுவதும் நாம் தயாராக இருக்க வேண்டும். கர்நாடக அரசு இந்த ஆண்டு ராஜ்யோத்சவா தின வைர விழாவை கொண்டாடுகிறது.
கர்நாடக அரசு 1994–ம் ஆண்டு கன்னட மொழி வழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. இதன் மூலம் தொடக்கக் கல்வி தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. ஆனால் நிதி மானியம் பெறாத பள்ளிகள் இதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றன. சட்டப் போராட்டத்தில் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2014–ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, குழந்தைகள் எந்த மொழியில் கல்வி கற்பது என்பதை அவர்களுடைய பெற்றோரே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தும் பலன் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக பிரதமருக்கு 2 முறை கடிதம் எழுதினேன். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டேன். மேலும் அனைத்து மாநில முதல்–மந்திரிகளுக்கும் கடிதம் எழுதி, இந்த விஷயத்தில் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
எல்லா மொழிகளின் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் தொடக்கக் கல்வியை தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எனவே, தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க பிரதமர் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கன்னட மொழியைக் காக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.“
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
