நந்தினி திருமணம் நாடெங்கும் வரவேற்பு

மதுரையைச் சேர்ந்தவர் நந்தினி. அவரும் அவரது தந்தை ஆனந்தனும், மதுக் கடைகளை மூடுதல் உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தந்தையின் ஆதரவோடு வாசகங்கள் நிறைந்த பதாகையோடு போராட்டத்தில் இறங்கிவிடுவார் நந்தினி. பெரும் கூட்டங்களைக் கூட்டுவதோ, வேறு சில அமைப்புகளோடு இணைவதோ இல்லாமல், தன்னுடைய போராட்டங்களைத் தானே முன்னெடுப்பார்.

ஜூலை 5 ஆம் தேதி, நந்தினிக்கும் குணா ஜோதிபாசுவுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை,ஜூன் 27 ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது

அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328-ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார். இதனைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால் ஜூலை 5 ஆம் தேதி நடக்கவிருந்த அவரது திருமணம் தடைபட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கைதுசெய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு மீண்டும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றம், பிணை வழங்கியது.

இதையடுத்து, நேற்று மாலை சிறையில் இருந்து நந்தினியும் அவரது தந்தையும் வெளியே வந்தனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில் நந்தினிக்கும், குணா ஜோதிபாசுவுக்கும் ஜூலை 10 அன்று திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

ஜூலை 5 ஆம் தேதி நடந்திருந்தால் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது. இப்போது நாடெங்குமிருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response