நடப்பு உலகக் கோப்பையில் முதல் தோல்வி – இந்திய ரசிகர்கள் சோகம்

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ராய், பேர்ஸ்டோ களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ஓவரில் 160 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

ராய் 66 ரன் (57 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் வெளியேறினார்.அபாரமாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதம் விளாசினார். அவர் 111 ரன் (109 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஷமி வேகத்தில் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் 1 ரன் மட்டுமே எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் – பென் ஸ்டோக்ஸ் இணை 4 ஆவது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சாஹல் – குல்தீப் சுழல் கூட்டணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

ரூட் 44 ரன் எடுத்து (54 பந்து, 2 பவுண்டரி) ஷமி வேகத்தில் ஹர்திக்கிடம் பிடிபட்டார். பட்லர் 20 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), வோக்ஸ் 7 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசிக் கட்டத்தில் பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்ட ஸ்டோக்ஸ் 79 ரன் (54 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பூம்ரா வேகத்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது. நடப்பு தொடரில் அந்த அணி 5 ஆவது முறையாக 300+ ஸ்கோர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிளங்க்கெட் 1, ஆர்ச்சர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். பூம்ரா, குல்தீப் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 338 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 4 ரன் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரூட் நழுவவிட்டார்.9 பந்துகளை சந்தித்த ராகுல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அடுத்து ரோகித்துடன் விராட்கோலி இணைந்தார். இருவரும் மிக நிதானமாக விளையாடி ரன் எடுக்க, இந்தியா 20 ஓவரில் 83 ரன் மட்டுமே சேர்த்தது.

அதன் பிறகு இந்த ஜோடி அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது.கோலி 59 பந்திலும், ரோகித் 65 பந்திலும் அரை சதம் கடந்தனர். கோலி 66 ரன் (76 பந்து, 7 பவுண்டரி) எடுத்து பிளங்க்கெட் பந்துவீச்சில் மாற்று வீரர் வின்ஸ் வசம் பிடிபட்டார்.

ரோகித் 102 ரன் (109 பந்து, 15 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார். கடைசிக் கட்டத்தில் ரிஷிபண்ட் 32 ரன், பாண்ட்யா 45 ரன் எடுத்தனர். தோனி 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்ஸ்), ஜாதவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்து 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்திய மட்டைப்பந்து ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ் 2 விக்கெட் , பிளங்க்கெட் 3 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அணி 8 போட்டியில் 5வது வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

Leave a Response