இங்கிலாந்து ரன் குவிப்பு காவி உடையே காரணம் – தெறிக்கும் விமர்சனங்கள்

உலகக்கோப்பை மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் 338 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், பேர்ஸ்டோவும் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். 57 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த போது ஜெசன் ராய், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டுக்கு ஜடேஜா பிடித்த அபார கேட்ச் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஜோடி 160 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் வாண வேடிக்கை காட்டினார். அதிரடியாக ரன் குவித்த அவர் சதம் அடித்து அசத்தினார். 109 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அவரும் ஆட்டமிழந்தார்.

பின்னர் களம் இறங்கிய அணித்தலைவர் மோர்கன் 1 ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் விழுந்த வண்ணம் இங்கிலாந்து அணி சற்றே தடுமாறினாலும், பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடியால் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக இங்கிலாந்து அணி சார்பில் ஜான் பேர்ஸ்டோவ் 111 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் எடுத்து வலுவான ஸ்கோரை அணி எட்ட வழிவகுத்தனர். இந்திய அணியின் சார்பில் ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இப்போது இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் அதிவேக ரன் குவிப்புக்கு இந்திய அணியின் காவி உடையே காரணமென்றும் அது ராசியில்லாதது என்றும் மூடநம்பிக்கை சார்ந்த விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response