பிக்பாஸில் கமலஹாசன் செய்யும் சேட்டைகளை விடுங்க. அது அவரோட தொழில். ஆனால் இன்னொரு விஷயம் பற்றி சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தலுக்கான அறிவிப்பு விதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்படவில்லை எனக்கூறி, தேர்தலை ரத்து செய்ததோடு புதிய அறிவிப்பாணை வெளியிட்டு 2016 டிசம்பருக்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. உரிய காலத்திற்குள் மீண்டும் தேர்தலை நடத்தக் கோரி திமுகவும் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து 2017ம் ஆண்டு நவம்பர் 17-க்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் செயல்படுத்தப் படவில்லை. நீதிமன்ற விதித்த கால அவகாசத்திற்குள் தேர்தல் நடத்தப்படாததால் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்தச்சொல்லி தலையாக அடித்து வருகிறோம்.
நேற்று முன்தினம் நடந்த மக்கள் நீதி மய்யம் கிராமசபை கூட்டத்தில் நடிகர் கமலஹாசன் கிராம மக்களை அழைத்து உங்கள் ஊரின் பஞ்சாயத்து தலைவர் என்ன செய்கிறார்? பஞ்சாயத்து தலைவர் வந்தாரா? என்னென்ன திட்டங்கள் குறித்து பேசுகிறார்கள்? என்று விசாரித்துள்ளார். ஆண்டவரின் அரசியலறிவு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது இயக்குநர் பாரதிராஜா இப்படி சொன்னார்.
கமலை சீண்டாதீங்க. அவனுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீங்க. அவன் வந்தான் என்றால் முழுசா கத்துக்கிட்டு வருவான். நீங்க எல்லாம் தாங்கமாட்டீங்க.
எழுத்தாளர் சுந்தரராமசாமியின் நாவலில் ஒரு வரி வரும். மாட்டுக்கு சொறிந்து கொடு, அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒரு போதும் சொறிந்து கொடுக்காதே.
– விநாயக முருகன்