தமிழக காய்கறிகளில் பூச்சிக்கொல்லி அதிகம், கேரளாவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை.

கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிக அளவு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.  அண்மையில் கேரளாவை சேர்ந்த உணவுத்துறை அதிகாரிகள் அண்மையில் கோவை வந்தனர். அவர்கள், வயல்களில் பயிரிடப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தனர். அப்போது, காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து,  தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் சில வகை காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கு கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்தது. மேலும், அம்மாநில வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை விற்க தற்காலிக தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு, கேரளா அரசு கடிதம் ஒன்று எழுதியது. அதில், “உங்கள் மாநிலத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமான அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கின்றன’’ என்று குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்து கலந்த காய்கறிகளை கேரளா மக்கள் சாப்பிடட்டும் என்ற எண்ணத்தில் இங்கு விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்யவில்லை. தமிழக மக்களுக்கும் அதே விளைச்சல்தான் உணவாக உள்ளது. இப்படி ஒரு அபாய எச்சரிக்கை செய்வதுபோன்ற குற்றச்சாட்டை கேரள அரசு கூறியிருக்க வேண்டாம்.

பொதுவாக காய்கறி விளைச்சலின் ஆரம்பத்தில் சில வகை பூச்சிகளை தவிர்ப்பதற்காகவும், விளைந்த பிறகு மற்ற வகை பூச்சிகளை தடுப்பதற்கும் பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அவை காய்கறியில் கலந்திருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வீரியத்துடன் இருப்பதில்லை. ஆனாலும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கு அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

கேரள அரசின் குற்றச்சாட்டுக்குப் பிறகு முள்ளங்கி, காலிபிளவர், முட்டைகோஸ் உட்பட 4 வகை காய்கறிகளில் 51 மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தோம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 48 மாதிரிகளில் எந்த பூச்சிக்கொல்லியின் தாக்கமும் இருப்பது கண்டறியப்படவில்லை. 3 மாதிரிகளில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் இருந்தாலும், அது அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருந்தது. எனவே யாரும் பயப்படத் தேவையில்லை.

மக்களின் நலனுக்காக எத்தனையோ பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக அரசு தடை செய்துள்ளது. பூச்சிகொல்லியை பயன்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை என்ற தனி திட்டத்தை வைத்திருக்கிறோம். தொடர்ந்து காய்கறிகளை சோதித்துப்பார்ப்பதோடு, விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

Leave a Response