மார்வாடி பெண் வடிவில் தமிழன்னை சிலை – தடுத்து நிறுத்த அழைப்பு

தமிழர் மரபுக்கெதிரான தமிழ் அன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

வரலாற்றுப் பெருமிதங்கள் கொண்ட தமிழர்களே !

நம்முடைய சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில் – நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று ஆன்மிகத்திலும் புரட்சி விதைத்த மதுரை மூதூரில் நம் தமிழ் அன்னையை சமற்கிருத நாயகியாக – மார்வாடி மங்கையாக மாற்றி – “தமிழன்னை” என்ற பெயரில் சிலை வடித்துத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் திறக்கப் போகிறார்களாம்.

நூறு கோடி ரூபாய்த் திட்டத்தில் தமிழ் அன்னை சிலை வடிக்கப்பட்டு, மதுரையில் நிறுவப்படும் என்று 2013-இல் அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். நியூயார்க்கில் அட்சன் ஆறு கடலில் கலக்குமிடத்தில் நிற்கும் உலகப்புகழ் பெற்ற “விடுதலைத் தேவி” சிலையைவிட சிறப்பாக அமைய வேண்டும் என்றார் செயலலிதா!

ஆனால் இப்போதுள்ள தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 16 கோடி ரூபாய் திட்டத்தில் தமிழ் அன்னை சிலையும் மற்ற தமிழ் மரபுப் படிமங்களும் அமைக்கப்படும் என்று அறிவித்து, அதைச் செயல்படுத்துவதற்காக உலக அளவில் ஏலம் கோரியுள்ளார்கள். ஏலம் கோரிப் பெற்று, முடிவு செய்யும் பொறுப்பை தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் பெயர்தான் பூம்புகார். தமிழ் அன்னை சிலை மற்றும் தமிழ் மரபுப் படிமங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்வரும் ஏலதாரர்களுக்காக திட்ட அறிக்கையை ஆங்கிலத்தில் 90 பக்கத்தில் வெளியிட்டுள்ளது பூம்புகார். அது பின்வருமாறு கூறுகிறது :

“சங்க காலத்திலேயே வேத பிராமணியம் உள்ளிட்ட இந்துயிசம் (தமிழ்) மக்களிடையே பிரபலமாக இருந்தது. அப்போது இந்துக்களிடம் சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமன், காளி வழிபாடு நிலவியது. சங்க காலத்தில் இருந்த கோயில்கள் சாந்துக் கரைசல், மரம், செங்கல் போன்ற அழியும் பொருட்களால் கட்டப்பட்டதால் அவை இப்போது இல்லை. பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் இப்போது காணக் கிடைக்கின்றன.

“சிலப்பதிகாரம் ஜைனம், புத்தம், சைவம் ஆகிய மதங்களைப் பேசுகிறது. கண்ணகியும் கோவலனும் ஜைனர்கள்”. (Poompuhar – Selection of Bidder – Request for Proposal – RFP No: TNHDC/17/M1/18-19-II).

“தமிழ் மரபு” (Tamil Heritage) என்றால் என்ன என்று அது பின்வருமாறு கூறுகிறது.

“சங்ககாலம் அதற்குப் பிந்தைய காலம் – சிலப்பதிகாரம், பல்லவர், பிற்காலப் பாண்டியர் – சோழர் காலம், முசுலிம் ஆட்சி, விசயநகர – நாயக்கர் ஆட்சி, கிழக்கிந்தியக் கம்பெனி –பிரித்தானிய ஆட்சி, இந்திய விடுதலைக்கு பிந்தையக் காலம், இப்பொழுதுள்ள நவீனகாலம் ஆகியவற்றின் பின்னணி கொண்டது தமிழ் மரபு. இத்தனையும் கலந்த மரபின் அடிப்படையில்தான் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் 2016இல் உருவாக்கப்பட்டது” (மேற்படி அறிக்கை பக்கம் 44).

மேலும் சொல்கிறது : ”இந்த மரபு மையம் நிரந்தரமான ஓர் அருங்காட்சியகம் அல்ல; அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு மாறும் தன்மையுடையதாக (Experimental and Dynamic) இது அமையும்”.

இந்த மையத்தில் அமைக்கப்படும் தமிழ் அன்னை உள்ளிட்ட படிமங்கள் கல் அல்லது வெண்கலத்தால் வடிவமைக்கப்படாது. நார்ப்பொருட்கள், பளிங்கு, கண்ணாடி போன்றவற்றால் செய்யப்படும்.

என்ன அலங்கோலம் இது! இந்தச் சிலைகளை வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சிற்பிகள் செய்வார்களாம்.

திட்டத் தொகையில் பாதியைத் தமிழ்நாடு அரசும் – மறுபாதியை ஏலம் எடுத்தவரும் ஏற்பார்களாம். ஏலம் எடுத்தவரே – இந்த உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தைப் பராமரிப்பாராம். பார்வையாளர் கட்டணம் வசூலிப்பார்கள். ஏலதாரரின் விருப்பத்திற்கேற்ப என்னென்ன புதிய சரக்குகள் சேருமோ?

பிராமண – மார்வாடி பெண் வடிவத்தில் தமிழ் அன்னை சிலை அமைக்கத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் முனைவது ஏன்? பிறந்த தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்வது ஏன்?

நம் கையை எடுத்து நம் கண்ணில் குத்துவது போல் நம் தமிழ் அன்னை பெயரால் வடநாட்டு ஆதிக்கப் படையெடுப்பு நடக்கிறது. இதைத் தடுத்திட, “தமிழர் மரபுக்கெதிரான தமிழ் அன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு” மதுரையில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், தமிழ் உணர்வாளர்களை இக்கூட்டமைப்பு கொண்டுள்ளது.

இக்கூட்டமைப்பு சார்பில் 17.06.2019 திங்கள் காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு அரசே !

1. வேத பிராமண – மார்வாடி வடிவத்தில் தமிழ் அன்னை சிலை திறக்கும் திட்டத்தைக் கைவிடு!

2. தகுதியான தமிழறிஞர்கள் – தமிழ்ச்சிற்பிகள் ஆகியோரைக் கொண்ட வல்லுநர் குழு அமைத்து அது பரிந்துரைக்கும் வடிவத்தில் தமிழ் மரபு மையமும் தமிழ் அன்னை சிலையும் நிறுவு! தமிழ் அன்னை சிலை கல் அல்லது வெண்கலத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரும் வருக!

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response