தோனியின் கையுறை சர்ச்சை – ஆதரவு எதிர்ப்பு முடிவு

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது.

ஜூன் 5 ஆம் தேதி நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள அணித்தலைவர் தோனி, இராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் விளையாடியது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய இராணுவத்தில் கவுரவ பதவி வகிக்கும் தோனி, துணை இராணுவ சிறப்புப் படையினரின் ‘பாலிதான்’ (தியாகத்தைக் குறிக்கும் அடையாளம்) என்ற முத்திரையை தனது கையுறையில் (குளோவ்ஸ்) பதித்து இருந்தார்.

இதுபோன்ற முத்திரையைப் பயன்படுத்துவது ஆட்ட விதிமுறைக்குப் புறம்பானதாகும். எனவே இராணுவ முத்திரையை அடுத்த ஆட்டத்துக்குள் தோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறுகையில் தோனி விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் முறைப்படி ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். ஐ.சி.சி. விதிமுறைப்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகோவைத் தான் பயன்படுத்தக்கூடாது. ஆனால் தோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை என்பது எங்களுக்கு தெரியும். முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. எங்களுக்கு வேண்டுகோள் தான் விடுத்து இருக்கிறது. அறிவுறுத்தல் எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு (நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான) முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐ.சி.சி. சீனியர் நிர்வாகிகளை சந்தித்து இது குறித்துப் பேசுவார்’ என்றார்.

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரென் ரிஜிஜூவும் தோனிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த பிரச்சினை நாட்டு மக்களின் உணர்வுடன் தொடர்புடையதாகும். நாட்டின் நலனை மனதில் கொள்ள வேண்டும். தோனி விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியாயமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்பட பலரும் தோனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

இன்னொருபக்கம் விளையாட்டில் தேசப்பற்று அரசியல் ஆகியனவற்றைக் கலக்கவேண்டாம் என்கிற குரல்களும் ஒலிக்கின்றன.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நேற்றிரவு நிராகரித்து விட்டது. “ஐ.சி.சி. போட்டிகளுக்குரிய விதிமுறையின்படி தனிப்பட்ட சின்னத்தையோ (லோகோ) அல்லது குறிப்பிட்ட தகவலை வெளிப்படுத்தும் வகையிலேயோ அவற்றை வீரர்களின் சீருடையிலோ அல்லது விளையாட்டு உபகரணங்களிலோ பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அது மட்டுமின்றி இந்த லோகோ விக்கெட் கீப்பர்களின் கையுறையில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்ற விதிகளுக்கு எதிரானது” என்று ஐ.சி.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்து வரும் போட்டியில் டோனி இந்த முத்திரை இல்லாத சாதாரண கையுறையையே பயன்படுத்துவார் என்று தெரிகிறது.

Leave a Response