மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையில் இவ்வளவு சூழ்ச்சிகளா? – அதிர வைக்கும் தகவல்கள்

தேசக் கல்விக் கொள்கையின் நோக்கம்: மாநிலங்களின் கல்வி உரிமைப் பறிப்பும் மொழித் திணிப்பும் தனியார் மயமாக்கலுமே.

முனைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு செய்து தயாரித்த பள்ளிக் கல்விக்கான வரைவுத் தேசக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கபட்ட மும்மொழிக் கொள்கையின் கீழ் இந்தி மொழியைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்புக் காட்டியதால் அதனை நீக்குவதாக இந்திய ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய ஒன்றிய அரசின் இந்த பின்வாங்கலை இந்தி மொழித் திணிப்பை காலங்காலமாக எதிர்த்து வரும் நமக்கு கிடைத்த வெற்றி என்று கருதுவோமானால் நாம் நிச்சயமாக ஏமாளிகளே.

ஏனெனில் இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்தையும் அதோடு வேறொரு மூன்றாவது மொழியையும் கற்க வேண்டும் என்கிற கட்டாயப்படுத்தலை அது திரும்பப் பெறவில்லை.

அதாவது புதிய தேசக் கல்விக் கொள்கையின் படி பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கல்விக் கொள்கை அப்படியே நீடிக்கிறது. இந்திக்குப் பதில் வேறொரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது!

இந்தி மட்டுமல்ல அதன் இடத்தில் இன்னொரு மொழியை கற்க வேண்டிய கட்டாயத்தை ஏன் மாணவர்கள் மீது திணிக்க வேண்டும் என்பதே கேள்வி.

எதற்காக இன்னொரு இந்திய மொழியை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு துடிக்கிறது? ஏனென்றால் அந்த மூன்றாவது மொழியாக இந்திக்கு பதில் சமஸ்கிருதத்தை வலிந்து படிக்க வைத்திட முடியும் என்று அது நம்புகிறது.

இதனை புரிந்துகொள்ள 2016ஆம் ஆண்டு டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் பரிந்துரைத்த தேசக் கல்விக் கொள்கையை நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.

தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்திய மொழி ஏதாவது ஒன்றை ஒரு மாணவர் தேர்வு செய்தால் மட்டுமே அதனை கற்பதற்கான வாய்ப்பு கிட்டிவிடாது. ஒரு பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் 20 விழுக்காட்டினர் அதனை தேர்வு செய்தால் மட்டுமே அதற்கான ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு அந்த மொழி கற்பிக்கப்படும். ஆனால் எல்லா பள்ளியிலும் இந்தியையும் சமஸ்கிருத்த்தையும் கற்றுத் தர ஆசிரியர்கள் இருப்பார்கள்.

எனவே இம்மொழிகளில் ஒன்றை தேர்வு செய்துக்கொள் என்று மாணாக்கர்களை வற்புறுத்துவார்கள். அவர்களும் ‘வேறு வழியின்றி’ ஏற்றுக்கொண்டு இந்தியையோ அல்லது சமஸ்கிருதத்தையோ கற்பார்கள்.

இதுதான் டி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அளித்த பரிந்துரையின்
திணிப்புச் சூத்திரம்!

இந்தித் திணிப்பின் நோக்கம் சமஸ்கிருத மொழி மயமாக்கலே! இந்திய ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்கள் எல்லாம் இந்தி மொழியில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அது உண்மையல்ல. அவை யாவும் சமஸ்கிருத மொழியிலேயே சூட்டப்பட்டுள்ளது.

ஆயுஸ்மான் பாரத், பாரத் மாலா, சாகர் மாலா, சர்வ சிக்ஸா அபியான், ராஷ்ட்ர பாஷா என்பதெல்லாம் சமஸ்கிருதமே.

இப்போது நீர் மேலாண்மைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி. அதன் பெயர் ஜால் சக்தி. இதற்கு முன் இந்த அமைச்சகத்திற்கு நீர் வள – அதாவது வாட்டர் ரிசோர்ஸ் மினிஸ்ட்ரி. இப்போது ஜால் சக்தி மினிஸ்ட்ரி (மினிஸ்ட்ரி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் வார்த்தை இல்லையோ?) இங்கு ஜால் என்பது சமஸ்கிருத வார்த்தை, இந்தி அல்ல, இந்தி மொழில் தண்ணீருக்கு பானி!

எனவே இந்தி பேசும் கற்கும் வட இந்திய மாநிலங்களில் சமஸ்கிருத திணிப்பு, மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களில் இந்தித் திணிப்பு!
ஆக திணிப்பு வேலைதான் நாடு முழுவதும் செய்யப்படுகிறது.

எனவே மும்மொழிக் கொள்கை என்றாலே அது மொழித் திணிப்புதான் என்பதை தமிழர்களும் தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே இப்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்தியை வலியுறுத்தவில்லை என்று சொல்லியுள்ளதைக் கண்டு ஏமாறாமல் இந்திய ஒன்றிய அரசு எதற்காக இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகம் செய்கிறது என்பதை ஆழ்ந்து அறிதல் வேண்டும்.

மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கும் மெகா மோடித் திட்டம்
“இந்தித் திணிப்பை விடுங்கள், புதிய தேசியக் கல்விக் கொள்கையில் எத்தனையோ நல்ல கல்வித் திட்டங்கள் இருக்கின்றன, அதனை விட்டுவிடக் கூடாது” என்று சிலர் பேசுகின்றனர்.

10+2 கல்வித் திட்டத்திற்கு பதிலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5+3+3+4 என்று பள்ளிக் கல்வியை பிரித்து தனித் தேர்வுகள் நடத்தி மாணவர்களின் சுமையை குறைத்துள்ளனர், மாடுலர் அசஸ்மெண்ட் என்று பாடங்கள் மீதான தேர்வைச் சுறுக்கி மதிப்பிடும் முறை என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி புளங்காகித்த்துடன் பேசுகின்றனர். இந்திய ஒன்றிய அரசின் திட்டங்கள் எல்லாம் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும் அல்லவா… ஆயுஸ்மான் பாரத் எனும் மருத்துவக் காப்பீடு திட்டம் போல்!

ஆனால் இந்த புதிய தேசக் கல்விக் கொள்கையை பரிந்துரை செய்த கஸ்தூரி ரங்கன் குழு உயர் பள்ளிக் கல்விக்கு பரிந்துரை செய்துள்ள அமைப்பை பற்றி யாரும் பேசுவதில்லை.

National Higher Education Regulatory Authority என்கிற தேச உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் என்கிற பரிந்துரையின் பொருள் என்ன?

இந்திய நாட்டின் உயர்கல்வித் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தும் உச்ச அதிகார அமைப்பு என்பதுதானே? இந்த அமைப்பை மாநிலங்கள் – குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது.

இதனை ஏற்றுக்கொண்டுவிட்டால் பிறகு பள்ளிக் கல்வித் தொடர்பான பாடத் திட்டத்தை இந்த அமைப்புதான் வகுத்தளிக்கும், அதனை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்படும். அதாவது மாநிலங்களின் கல்வி உரிமையை சட்டப் பூர்வமாக பறித்திடும் தந்திரம் இது.

அதுமட்டுமல்ல, ராஷ்ட்ரிய சிக்ஸா ஆயோக் எனும் அமைப்பை கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. நித்தி ஆயோக் எனும் அமைப்பு எப்படி இந்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து (தனியார் மயமாக்கலுக்கு) வழி காட்டுகிறதோ அதேபோல கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடிய அமைப்பாக ராஷ்ட்ரிய சிக்ஸா ஆயோக் அமைப்பு இருக்க வேண்டும் என்றும் அதற்கு பிரதமர் தலைமையேற்க வேண்டும் என்று சொல்லி வைத்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவை யாவற்றையும் ஆழ்ந்து நோக்கினால் அதில் ஒரே நாடு,
ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம் என்பதை அடிப்படையாகவும், அதே நேரத்தில் கல்வியை பள்ளியில் இருந்து தொழிற்கல்வி வரை தனியார் மயமாக்கல் எனும் வர்த்தக நோக்கை நிறைவேற்றும் கூறுகளைக் கொண்டிருப்பதையும் காணலாம்.

எனவே இத்திட்டம் இந்நாட்டின் பன்முகத் தன்மைக்கும்,
மொழி வழி மாநிலங்களின் கல்வி, பண்பாடு, பொருளாதார உரிமைகளை பறிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெரும் சவாலான இடர்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். நிமிர்ந்து துணிவுடன் எதிர்கொள்வோம்.

– கா.ஐயநாதன்.

Leave a Response