தடியடி கண்ணீர்ப் புகை வெடிகுண்டு வீச்சு எந்திரம் பழுது – 2 ஆம் கட்டத் தேர்தல் தொகுப்பு

இந்தியாவில் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி நடந்தது.

தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்றத் தொகுதிகள் நேற்று (ஏப்ரல் 19) இரண்டாம் கட்டத் தேர்தலைச் சந்தித்தன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 15 கோடியே 80 இலட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் தேவகவுடா (தும்கூர்- மதசார்பற்ற ஜனதாதளம்), மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங் (உதம்பூர்-பா.ஜனதா), ஜூவல் ஓரம் (சுந்தர்கார்-பா.ஜனதா), சதானந்த கவுடா (பெங்களூரு வடக்கு- பா.ஜனதா), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி-பா.ஜனதா), முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷில் குமார் ஷிண்டே (சோலாப்பூர்-காங்கிரஸ்), வீரப்ப மொய்லி (சிக்கபல்லபூர்-காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்-தேசியமாநாடு கட்சி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 18 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதேபோன்று, ஒடிசா சட்டசபை தேர்தலில் 2 ஆம் கட்டமாக 35 தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்தத் தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

12 மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. இந்தத் தேர்தலில் வாக்குரிமை பெற்ற புதிய வாக்காளர்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்து வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அவர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரும்போது செல்போன்களில் ‘செல்பி’ படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பதிவேற்றம் செய்தனர்.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களிலும் பரவலாக மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்காளர்கள் காத்திருந்து வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது.

மராட்டிய மாநிலம், அகோலா தொகுதியில் காவ்தா என்ற இடத்தில் மின்னணு வாக்கு எந்திர வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த எந்திரத்தை தூக்கிப்போட்டு உடைத்த ஸ்ரீகிருஷ்ணா கியாரே என்ற வாக்காளர் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீரில் ஸ்ரீநகர், உதம்பூர் என 2 தொகுதிகளிலுமே வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஸ்ரீநகரைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்களிக்க ஆளின்றி தீவுகள் போல காட்சி அளித்தன.

தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, மகன் உமர் அப்துல்லாவுடன் வந்து, தான் போட்டியிடுகிற ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பெங்களூருவிலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா மனைவி சென்னம்மாவுடன் வந்து ஹசனிலும் வாக்குப்பதிவு செய்தனர். சில இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கி நடந்தது.

கர்நாடகாவிலுள்ள மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய நடிகை சுமலதாவின் ஆதரவாளர்களுக்கும், மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் நிகில் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

மராட்டியத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சோலாப்பூரிலும், முன்னாள் முதல்வர் அசோக் சவான் நாந்தெட்டிலும் ஓட்டுப்பதிவு செய்தனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ராய்கஞ்ச் தொகுதியில் கட்டாபுல்பாரி என்ற இடத்தில் வாக்குப்பதிவை படம் எடுக்கச்சென்ற டி.வி. சேனல் ஒன்றின் கேமராமேன் தாக்கப்பட்டார்.

அதே தொகுதியின் சோப்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய படையினர் பாதுகாப்பு போடப்படவில்லை என்று கூறி, சிலர் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க முற்பட்டபோது காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்கினர். வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வெடித்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

தனது கார் தாக்குதலுக்கு ஆளானதாக அந்த தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் முகமது சலீம் குற்றம் சாட்டினார்.

பீகாரில் பல இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பழுதுபட்டதாக புகார்கள் எழுந்தன. அங்கு சில இடங்களில் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்திலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதித்தது. இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சினை எழுப்பினார்.

பதேப்பூர் சிக்ரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் ராஜ்பாப்பர், மதுரா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். மதுராவில் கந்தோலி என்ற கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு 9 மணிக்கு பிறகுதான் தொடங்கியதால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஒடிசாவில் முதல் கட்டத் தேர்தலை விட இரண்டாம் கட்டத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதுபட்டு, ஓட்டுப்பதிவு குறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஷ்கார் மாநிலத்தில் ராஜ்நந்த்கான் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய மோக்லாமன்பூரில் மாவோயிஸ்டுகள் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.

12 மாநிலங்களிலும் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. தமிழ்நாட்டில் மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 8 மணிக்கு முடிந்தது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது.

95 தொகுதிகளில் 66 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு எனவும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறின.

3 ஆவது கட்டத் தேர்தல் 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் 23 ஆம் தேதி நடக்கிறது. ஏழு கட்ட நாடாளுமன்ற தேர்தலில், 3 ஆவது கட்டத் தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Leave a Response