போட்டியிட 111 பரப்புரைக்கு 300 – அதிரடிக்கும் அய்யாக்கண்ணு கலக்கத்தில் மோடி

2019 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் 7 ஆவது கட்டமாக மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அங்கு மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் போட்டியிடவுள்ளனர்.

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

கடைசிவரை மோடி அவர்களைச் சந்திக்கவில்லை. பொறுப்பானவர்களை அனுப்பி வைக்கவும் இல்லை. இப்படி ஒரு போராட்டம் நடப்பதே தனக்குத் தெரியாது என்பதுபோல் நடந்துகொண்டார்.

இதனால் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கவேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், 60 வயது பூர்த்தியான விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், தனிநபர் காப்பீடு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் எனது தலைமையில் 141 நாட்கள் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், நான் உள்பட தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட இருக்கிறோம்.

இதற்காக நாங்கள் வாரணாசிக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறோம். 24 ஆம் தேதி காலை வாரணாசியைச் சென்றடைந்து விடுவோம். அன்றைய தினமே அங்கு எங்களுடைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இருக்கிறோம். பின்னர், அங்கு வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் செய்வோம்.

வேட்பு மனு தாக்கலின் போது ஒரு சுயேச்சை வேட்பாளரின் பெயரை 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாட்டையும் செய்து இருக்கிறோம். அத்துடன் பிரசாரம் செய்வதற்காக 300 பேரையும் வாரணாசிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறோம்.

வாரணாசி செல்வதற்காக தொடர்வண்டியில் ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவும் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு சுயேச்சை வேட்பாளரை பத்துப்பேர் முன்மொழிய வேண்டுமென்றால் 111 பேருக்கு 1110 பேர் வேண்டும். தமிழகத்திலிருந்து கொண்டு வாரணாசியில் அவ்வளவு பேரைத் தொடர்பு கொண்டு தயார் செய்திருப்பதும் பரப்புரைக்கு 300 பேரோடு வருகிறார்கள் என்கிற செய்தியும் பாஜகவினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response