தோனியின் அபார வியூகம் – மண்ணைக் கவ்விய பெங்களூரு

எட்டு அணிகள் விளையாடும் 12 ஆவது ஐ.பி.எல். மட்டைப்பந்து திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு (மார்ச் 23,2019) தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணித்தலைவர் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேலும், அணித்தலைவர் விராட் கோலியும் களம் புகுந்தனர்.

வேகமில்லா மந்தமான இந்த ஆடுகளத்தில் இருவரும் திணறினர். பந்து அதிகமாக எழும்பவே இல்லை. ஆடுகளத்தன்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் எதிரணியை மிரள வைத்தார். அவரது பந்து வீச்சில் விராட் கோலி (6 ரன், 12 பந்து) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த மொயீன் அலியும் (9 ரன்) அவரது சுழல் வலையில் சிக்கினார்.

உலகின் அபாயகரமான ஆட்டக்காரர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் டிவில்லியர்சும் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இளம் சூரர் ஹெட்மயர் (0) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக, பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் நிலைகுலைந்தது.

ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலுக்கு உகந்த வகையில் காணப்பட்டதால் சென்னை அணித்தலைவர் தோனி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சுழல் ஜாலத்தில் வேடிக்கை காட்டினர். இதனால் உப்பு, சப்பில்லாமல் நகர்ந்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். பந்து எல்லைக்கோடு பக்கம் செல்வதே அபூர்வமாக தெரிந்தது.

முடிவில் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் வெறும் 70 ஓட்டங்களில் அடங்கியது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 6 ஆவது மோசமான ஸ்கோர் இதுவாகும்.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கி கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆன பார்த்தீவ் பட்டேல் 29 ரன்களில் (35 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். அவரைத் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. சென்னை அணி தரப்பில் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து 71 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியும் தள்ளாடியது. ஷேன் வாட்சன் டக்-அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் ஆடினர். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 16 ரன்களே எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றியது. 2 ஓவர்கள் மெய்டனானது. இருப்பினும் குறைவான இலக்கு என்பதால் சென்னை அணி ஒரு வழியாக தட்டுத்தடுமாறி எட்டிப்பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 28 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு அணி கடந்த 5 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியதில்லை. அந்த சோகம் தொடருகிறது. இதையும் சேர்த்து கடைசியாக சென்னைக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்குத் தோல்வியே மிஞ்சியிருக்கிறது.

Leave a Response