மம்தா அதிரடி மோடிக்கு மூக்குடைப்பு – தில்லி பரபரப்பு

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

உரிய ஆஅணங்கள் இன்றி வந்ததால்,கொல்கத்தா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆணையரின் வீட்டுக்கு நேரில் சென்று மத்திய அரசைக் கண்டித்தும், அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு இந்தியாவெங்கும் ஆதரவு குவிந்து வருகிறது.

இந்த நிலையில், கொல்கத்தா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்தது.

அதில் ஒரு மனுவில், பலமுறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார், சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த ஆவணங்களை சி.பி.ஐ. வசம் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் சி.பி.ஐ. தாக்கல் செய்த மற்றொரு மனுவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தச் சென்றதாகவும், அவர்களை மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும், அரசியல்வாதிகளுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை என்றும், எனவே அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் மனு மீதான விசாரணை (செவ்வாய்க்கிழமை) இன்று நடைபெறும் என்று கூறினார்.

சாரதா நிதி மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்துள்ளன என சிபிஐ சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை ஆணையர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க நாங்கள் உத்தரவிடுகிறோம். பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

காவல்துறை ஆணையர் ராஜூவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராக கோரியும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

காவல்துறை ஆணையரைக் கைது செய்யக்கூடாது, கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பெறக்கூடாது எனவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும்,இந்த விசாரணை நடுநிலையான இடமான மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் நடக்க வேண்டும். இந்த விசாரணையின் போது கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராகக் கடினமான நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் ஏதும் சிபிஐ எடுக்கக் கூடாது.

இதற்கிடையில், முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசைக் கண்டித்தும், அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 3 ஆவது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-

சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் எனச் சொல்லவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. போலீஷ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

நீதித்துறை மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் நாங்கள் மிகவும் மரியாதை காட்டுகிறோம். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா காவல்துறை ஆணையரைக் கைது செய்யக்கூடாது கொல்கத்தாவுல் இல்லாமல் தில்லியும் இல்லாமல் பொது இடத்தில் வைத்து விசாரணை செய்யவேண்டும் என்கிற உத்தரவு மூலம் சிபிஐயை வைத்து மம்தாவை மிரட்ட நினைத்த மோடிக்குப் பெருத்த ஏமாற்றம் என்றும் நீதியின் முன்னால் மூக்குடைபட்டு நிற்கிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Response