தனித்தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டும்–உலகநாடுகளிடம் காசிஆனந்தன் கோரிக்கை


ஈழம் குறித்த அடுத்தக் கட்ட செயற்பாடு குறித்து தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் -கவிஞர் காசி. ஆனந்தன் தலைமையிலான இந்திய-ஈழத் தமிழர் நட்புறவு மய்யம் விடுத்துள்ள அறிக்கை,

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய அய். நா. மனித உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கை எதிர் வரும் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. ஏற்கெனவே கடந்த 2011-ஆம் ஆண்டு அய். நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து அடிப்படை விசாரணை நடத்தி போர்க்குற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக அய். நா. மனித உரிமை ஆணையம் அடுத்தக் கட்ட விசாரணை மேற்கொள்ள ஒரு குழுவை அமைத்தது. அதன் அறிக்கையே வரும் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. அய். நா. மேற்கொண்ட இந்த விசாரணைகளை நாம் வரவேற்கும் அதே நேரத்தில், இவ்விரு விசாரணைகளும் 2008-2009-ஆம் ஆண்டு ஈழ மக்கள் மீது நடத்தப்பட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்களை மட்டுமே தங்கள் விசாரணையின் வரையறையாக எடுத்துக்கொண்டுள்ளதை நாங்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் 2008-இல் தொடங்கவும் இல்லை. 2009-உடன் முடிந்துவிடவும் இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தில் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல இலங்கையில் கடந்த 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த இனப்படுகொலை 2009-க்குப் பிறகும் இன்று வரையிலும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக பெண்கள் இராணுவ அத்துமீறல்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். தமிழர்களின் வாழ்வியல் ஆதாரங்கள் முற்றிலும் பறிக்கப்பட்டு சிங்களர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து வரும் சிங்கள அரசுகள் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈழத் தமிழ் மக்களை காக்கும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நாங்கள் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
1. தமிழக அரசும் இலங்கையின் வடக்கு மாகாண சபையும் சுட்டிக்காட்டியிருப்பதை போல இலங்கையில் கடந்த 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக, இன்று வரையிலும் நடப்பது தமிழ் இனப்படுகொலை என்பதை உலக நாடுகள் புரிந்து ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தி எஞ்சியுள்ள ஈழத் தமிழ் மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2. தொடரும் இந்த இனப்படுகொலைக் குற்றம் சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
3. இனப்படுகொலைக் குற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நிவாரணத் தீர்வாகவும், நிரந்தர அரசியல் தீர்வாகவும், இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழ் மக்களிடையே தனித் தமிழ் ஈழ நாட்டிற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை தமிழக மக்கள், ஈழத் தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட கட்சிகள், அமைப்புகள், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், தமிழர் அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள் ஆகிய அனைவரும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நோக்கி அழுத்தமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்திய-ஈழத் தமிழர் நட்புறவு மய்யத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Response