
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கி.த.பச்சையப்பன்(வயது 84). தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மொழிப்போராட்ட தியாகியும், தமிழ் அறிஞரும் ஆவார்.
தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தார்.
காலமெல்லாம் தமிழுக்காகப் போராடிய இவர், தமிழ் மொழி வளர்ச்சிக்காகக் குரல் கொடுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்களுடன் நெருக்கமாக இருந்துவந்தார். அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் ஒரு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு செப்டம்பர் 20 அன்று, தனது மகன் தொல்காப்பியனுடன் வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவசரசிகிச்சை ஊர்தி மூலம் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கி.த.பச்சையப்பன் ஏற்கனவே கண்தானம் செய்வதாக அறிவித்து இருந்தார். இந்தத் தகவலை அவரது மகன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தெரிவித்தார். அதன்படி அவரது உடலில் இருந்து கண்கள் அகற்றப்பட்டு, வேறு நபர்களுக்கு தானம் செய்வதற்காக பத்திரப்படுத்தப்பட்டது.
அவருடைய இறுதிச் சடங்கு 21.9.201 வெள்ளிக்கிழமை
பிற்பகல் 2 மணிக்கு மேல், கி.த. பச்சையப்பனார் இல்லம்
19/42, குறுக்குச் சாலை,புது வண்ணாரப்பேட்டை,
சென்னை- 81
என்கிற முகவரியில் நடைபெறவிருக்கிறது.
அவருக்கு தமிழ் மொழி இருக்கும்வரை ஐயா கி.த.பச்சையப்பனாரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும் என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.
பெருந்தமிழ் புலவரும், மொழி உணர்வாளருமான எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா புலவர் கி.த. பச்சையப்பனார் அவர்கள் காலமான செய்திகேட்டு பெரும் அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமுமடைந்தேன். ஐயா கி.த.பச்சையப்பன் அவர்கள் புதுச்சேரி மண்ணை இந்தியாவோடு இணைக்க பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர். ‘இந்தி வந்து நுழைந்தால் இன்பத்தமிழ் எங்கு மடிந்துவிடுமோ!’ என்று கருதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் புரட்சியாளர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மதிப்பியல் தலைவர் எனப் பல்வேறு பெருமைமிக்கப் பொறுப்புகளைச் சுமந்த அவர், நாம் தமிழர் கட்சியின் அறிவார்ந்த பெருமக்கள் அங்கம் வகிக்கிற ஆன்றோர் அவையத்தின் உறுப்பினராகவும் இருந்து முதுபெரும் மொழியின் சீர்மிகு சான்றோராக விளங்கினார்.
பெருந்தமிழர் ஐயா கி.த. பச்சையப்பன் அவர்கள் சென்னை வள்ளல் எட்டியப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தவர்; மேலும், தமிழியக்கம் திங்களிதழின் ஆசிரியராகவும், தமிழ் ஓசை நாளிதழ் மொழிநடை ஆசிரியராகவும் இருந்து இதழியல் பணியிலும் சிறந்து விளங்கினார். இன உணர்வுப் போராட்டக்களங்களில் முன்களப் போராளியாகத் தன் இறுதிநாள்வரை திகழ்ந்த ஐயாவின் மறைவு தமிழ் இனத்திற்கும், மொழிக்கும் நேர்ந்து இருக்கிற ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
தனிப்பட்ட முறையில் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதும் அதீத அக்கறை கொண்டு அதற்கான ஆலோசனைகளை வழங்கி, என்னை நெறிமுறைப்படுத்துவதில் ஐயாவிற்கு பெரும்பங்குண்டு. ஐயா கி.த பச்சையப்பன் அவர்களின் மறைவு என்பது தனிப்பட்ட அளவில் எனக்கு நேர்ந்து இருக்கிற பெரும் இழப்பாகவே கருதுகிறேன்.
பெரும்புலவர் ஐயா கி.த. பச்சையப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரத்தில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். தமிழர் நிலம் இருக்கும் வரை, தனி நிகர் தமிழ் மொழி இருக்கும் வரை பெரும்புலவர் ஐயா கி.த.பச்சையப்பன் அவர்களின் புகழ் வரலாற்றில் நீடித்து நிலைத்து நிற்கும். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


