விநாயகருக்கு தம்பி முருகன் என்பது தமிழகத்தில் மட்டுமா? – இயக்குநர் கேள்வி

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இயக்குநர் தங்கர்பச்சான் கூறியிருப்பதாவது….

முருகனும் விநாயகரும் அண்ணன்-தம்பி என்பதால் நாம் விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்குகிறோம்!கொண்டாடுகிறோம்!! எங்கள் வீட்டிலும் இந்த கொண்டாட்டம் நிகழ்கிறது. நாம் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதுபோல் முருகன் விநாயகரின் தம்பி என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பங்குனி உத்திரமும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்! ஆனால், தமிழ்நாடு தவிர எந்த மாநிலத்திலும் முருகனை வணங்கி பங்குனி உத்திரம் திருநாளை கொண்டாடுவதில்லை.

நம் திராவிடக் குடும்பம் எனச் சொல்லும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் கூட முருகனை கொண்டாடுவதில்லை.

இருவரும் அண்ணன் தம்பி என்பதால் இந்தியா முழுக்க முருகன் வணங்கப்பட்டிருக்க வேண்டும். எதனால் முருகனை கொண்டாடவில்லை என்கிற கேள்வி உருவாகி இருக்கிறது!

இதை சமாளிக்க காரணம் சொல்பவர்கள் கார்த்திகேயன், கார்த்திக் என்ற பெயரில் ஏதாவதொரு கோவில்களில் ஒரு சிறிய சிலை இருப்பதை சுட்டிக்காட்டி சாக்குப்போக்கு சொல்வார்கள். இந்திய அரசியலில் தமிழகமும், தமிழர்களும் ஒதுக்கப்படுவது போல் இதிலும் ஒதுக்கப்படுவதாகத் தோன்றுகிறது!

அப்படியெல்லாம் இல்லை எங்களுக்கு சிவனின் பிள்ளைகளான விநாயகரும் முருகனும் ஒன்றுதான் எனச் சொல்லி சப்பைக்கட்டு கட்டுபவர்கள் இந்தியா முழுக்க முருகனையும் வணங்க ஏற்பாடு செய்யுங்கள். விநாயகர் சதுர்த்தி போல் பங்குனி உத்திரமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு இந்தியா முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் நமக்கெல்லாம் உண்மையான மகிழ்ச்சி!!

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response