கட்டுரைக்கும் பொய் அழகோ? – வைரமுத்துவுக்கு பெ.மணியரசன் சூடான எதிர்வினை

கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்கிற தலைப்பில் தமிழுக்குத் தொண்டு செய்தோரை ஆவணப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 19 ஆவது கட்டுரையாக கால்டுவெல் பற்றி எழுதியிருந்தார்.

அக்கட்டுரையில் உள்ள தவறுகளைச் சுட்டி பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை….

பாவலர் வைரமுத்து அவர்களின் படைப்பாற்றல் வலிமை நாடறிந்தது! சமகாலத் தமிழ் வளர்ச்சிக்கு வைர முத்துவின் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய அரசியல் சார்பு என்பது அவருடைய உரிமை என்ற அளவில் அது குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது தமிழாற்றுப் படையின் 19 ஆவது கட்டுரையாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்” பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 25.08.2018 அன்று அவர் படித்த கட்டுரையின் சில பகுதிகள் விமர்சனத்திற்குரியவை.

சமற்கிருதத் துணையின்றி தமிழ் இயங்கும் என்று கண்டறிந்த கால்டுவெல் பாரட்டப்பட வேண்டியவர். அதே வேளை அவரின் பிழைகளை சுட்டிக்காட்டி திறனாயவும் வேண்டும்.

வைரமுத்து அவர்களின் கால்டுவெல் உரையில் ஒரு பகுதி 26.08.2018 “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ளது.

“தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்க முடியாத மானுடக் கலாச்சாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக்குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.” (தினத்தந்தி)

“திராவிடம்” என்ற இனக் குறியீட்டைக் கால்டுவெல் கண்டறியாது இருந்தால் தமிழர்களுக்கு அடையாள மில்லை, ஆதாரமில்லை, கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்று வைரமுத்து வர்ணித்திருப்பது – அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பது போல் கட்டுரைக்கும் பொய்யழகோ? கால்டு வெல்லைப் பெருமைபடுத்துவதற்காகத் தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா?

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயி ருந்தாலும், தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்காது; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும், மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்களாக சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்திருப்பார். அவர் சங்கத்தமிழில் – திருக்குறளில் – காப்பியத் தமிழில் காலூன்றி நின்றவர்!

வைரமுத்து தமது கட்டுரையில் வரிசைப்படுத்தி யிருப்பது போல் கால்டுவெல் வருவதற்கு முன்பாக சமயப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ஐரோப்பியச் சான்றோர்கள் இத்தாலியின் இராபர்ட் நொபிலி (1577 – 1656), இத்தாலியின் வீரமா முனிவர் என்ற கான்ஸ் டன்டின் ஜோசப் பெஸ்கி (1680 – 1742), செர்மனி யிலிருந்து வந்த சீகன் பால்கு (1682 – 1719) இங்கிலாந் திலிருந்து வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777 – 1819), இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு. போப் (1820 – 1908) போன்றோர் தமிழின் சீர்மை, தூய்மை, ஆழம், அகலம் அனைத்தையும் கண்டு வியந்து போற்றினர். தங்கள் படைப்புகளையும் தமிழில் வழங்கினர்.

வீரமாமுனிவர் தமிழுக்குச் சதுர அகராதி தந்தார். எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தார். ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கிறித்தவ சமயம் பரப்ப வந்த சான்றோராக இருந்தும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மனம் பறிகொடுத் தார். “தமிழ் மாணவன்” என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார் போப்!

தமிழின் தனித்தன்மையை ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வாழும்; தமிழர் வாழ்வர் என்று கருதுவது அடிமை மனப்பான்மையில்லையா?

கால்டுவெல்லுக்கு முன் ஒப்பிலக்கண ஆய்வு செய்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு. அவர் ஆங்கிலேயர்! அதே வேளை சமற்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகள் கற்றவர். சென்னையில் நாணய அச்சடிப்பு நிலைய அதிகாரியாக இருந்தபோது திருவள்ளுவர் படம் பொறித்து நாணயம் வெளியிட்டார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சென்னை மாகாணத்தில் நிர்வாகப் பணிபுரிய வரும் இளம் வெள்ளை அதிகாரிகள் இம்மாகாணத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் கல்லூரி நிறுவினார் எல்லீசு! தம் பெயரைத் தமிழ்மரபுப்படி “எல்லீசன்” என்று அழைக்கச் சொன்னார்.

மேற்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் கண்காணிப்புக் குழு செயலாளராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் 1816இல் தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து எழுதிய நூலுக்கு எல்லீசு தந்த முன்னுரை சிறந்த மொழியியல் ஆய்வுரை என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அதில்தான் எல்லீசு அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இவை தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றார். இவற்றைத் தென்னிந்திய மொழிகள் என்றாரே தவிர திராவிட மொழிகள் என்று கூறவில்லை! அப்போதும் “திராவிட” என்ற சொல்லாட்சி சமற்கிருத நூல்களில் இருந்தது. பிராமண அறிவாளிகள் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லீசன் “திராவிட மொழிக் குடும்பம்” என்ற திரிபு வேலையைச் செய்யவில்லை.

தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்ற எல்லீசு இவற்றின் தாய் தமிழ் என்றார். இவ்வாறு எல்லீசு கூறியது 1816இல்! நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1856 இல், இந்தத் தென்னிந்தியத் தனி மொழிக் குடும்பத்திற்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று கால்டுவெல் புனைவுப் பட்டம் சூட்டினார். எது முந்திய ஆய்வு என்று இப்போது தெரிகிறதா?

கவிஞர் வைரமுத்து கூறுவது போல் கால்டுவெல் இல்லையென்றால் தமிழ் மொழிக்கு – தமிழர்களுக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை; கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்ற அவலம் வரலாற்றில் என்றுமே இல்லை! கால்டுவெல்லே – வைரமுத்துவின் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் தமது ஒப்பிலக்கண நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

“இவ்வின மொழிகள் (தென்னிந்திய மொழிகள் – பெ.ம.) ஐரோப்பிய ஆசிரியர்களால், ஒரு காலத்தில் “தமுலியன்” அல்லது “தமுலிக்” என்று பெயரிடப் பட்டிருந்தன. ஆனால் இவ்வின மொழிகளுள் தமிழ் நனி மிகப் பழைமையுடைய, பெரிதும் நாகரிகமடைந்த மொழியாதலாலும், தன் இன (மொழி வகையினம்) உடைமைகளாய்ச் சொல்லுருவங்கள், சொல் மூலங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியைப் பெற்றுள்ளதாலும், தமில், தமிலன் என்ற சொற்களை முறையே தமிழ் மொழியையும் அதை வழங்கும் மக்களையும் குறிக்க மேற்கொள்வதே விரும்பத்தக்கதாம்.”

– திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல் அய்யர், தமிழில் – புலவர் கா. கோவிந்தன் எம்.ஏ., சு. ரத்னம் எம்.ஏ., பக்கம் – 7.

ஐரோப்பிய நூலாசிரியர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் தமக்கு முன்பாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதைக் கால்டுவெல்லே கூறுகிறார்.

ஆரியம் வெட்டிய திராவிடப்
படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்
—————————————–

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்று கால்டுவெல் கூறியதாக வைரமுத்து எழுதியுள்ளார். அது உண்மையன்று; திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ் என்ற கால்டுவெல், திராவிடம் என்ற மூலமொழிதான் (Proto Language) தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி களுக்குத் தாய் என்கிறார்.

இந்தத் திராவிட மொழி இருந்ததற்கான மூலச் சான்றை தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தெலுங்கு மொழியிலிருந்தோ கால்டுவெல் எடுக்கவில்லை. ஏன் எனில் இவற்றில் பழங்காலத்தில் திராவிட மொழி என்ற பெயரில் ஒரு மொழி கூறப்படவில்லை. பிறகு எங்கிருந்து எடுத்தாராம் கால்டுவெல்? ஆரிய மொழியான சமற் கிருதத்திலிருந்து திராவிட மொழிக்கான – திராவிட இனத் திற்கான சான்றை எடுத்தேன் என்கிறார். அதிலும் மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்கிறார். இதோ கால்டுவெல் கூற்று :

“மனு கூறுகிறார் (x43, 44) : சத்திரியர்களைச் சேர்ந்த கீழ்வரும் பழங்குடிகள் மெல்ல மெல்ல விரிசாலா (புறச்சாதியினர் – Out caste) ஆனார்கள். அவ்வாறு கீழ்நிலை அடைந்ததற்கு அவர்கள் புனிதச்சடங்குகளைச் செய்யாததும், பிராமணர் தொடர்புகளைக் கைவிட்டதும் காரணம் ஆகும். அப்படி (புறச்சாதிகள்) ஆனவர்கள் பௌந்தரர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போ ஜர்கள், யவனர்கள், சாகர்கள், பரதாஸ், பகலவாஸ், சீனாஸ், கிராதஸ், தாததாஸ், கசாஸ்”.

“மனு குறிப்பிடும் இப்பழங்குடிகளுள் திராவிடர்கள் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியப் பழங்குடிகள் அனைத்துமே திராவிடர்கள் என்று கருதலாம். இப்பழங்குடிகளுள் யாராவது தாங்கள் திராவிடர்கள் அல்ல என்று கருதினால், அவர்கள் ஆந்தி ரர்கள் – உட்பகுதிகளில் உள்ள தெலுங்கர்கள்; அவர்கள் ஏற்கெனவே ஐத்தரேயா பிராமணாவில் பெயர் குறிக்கப் பட்டவர்கள்; விசுவாமித்தரர் வம்சத்திலிருந்து இழி வடைந்த புஞ்ரஸ், சபரஸ், புலிந்தஸ்.”

– இராபர்ட் கால்டுவெல், A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages, 2008, ஆங்கிலம் – Kavithasaran Pathipagam, Chennai – 600019, பக்கம் – 5,6.

மேற்படி மனுநூல் திராவிடர் என்பவர் விரிசாலா என்ற இழி பிறப்பாளர் என்று கூறுகிறது. விரிசாலா என்ற சொல் தான் பின்னர் சூத்திரர் என்று விளக்கப்பட்டது என்கிறார் பேராசிரியர் த. செயராமன் (இனவியல் : ஆரியர் – திராவிடம் – தமிழர் தொடர் கட்டுரை).

மனுதர்ம எதிர்ப்பு பேசும் பெரியாரியர்கள் கொண்டாடும் ‘திராவிடரின்’ பிறப்பு இவ்வாறு உள்ளது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்மொழி அல்லது மூலமொழி தமிழ்தான் என்பதை – மாற்றி அமைப்பதற்காகத்தான் ஆரியச் சான்றுகளைத் தேடி அலைகிறார் கால்டுவெல். அந்தத் தேடலில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலபட்டர் என்ற ஆரியர் எழுதிய சமற்கிருத நூலான தந்திர வார்த்திகாவில் வரும் “ஆந்திர – திராவிட பாஷா” என்பதைக் கண்டறிகிறார். இதில் உள்ள ஆந்திரம் தெலுங்கைக் குறிக்கிறது. “திராவிட பாஷா” என்பது மூலமொழியைக் குறிக்கிறது என்று தன்விருப்பப்படி – சான்றேதும் இல்லாமல் முடிவுக்கு வருகிறார். அதே ஏழாம் நூற்றாண்டில், குமாரிலபட்டர் படித்த அதே காஞ்சிபுரத்தில் தர்க்கங்கள் பல நடத்திய திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று தெளிவாக இரு இனங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கால்டு வெல் எடுத்துக்கொள்ளவில்லை!

கால்டுவெல் சமற்கிருதம் படித்து ஆரிய இலக்கியங்களில் ஆரியக்கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

“பரதகண்ட புராதனம்” என்றொரு நூலைக் கால்டுவெல் தமிழில் எழுதியுள்ளார். இதன் மறுபதிப்பை என்.சி.பி.எச். பதிப்பகம் 2012 மே மாதம் வெளியிட் டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள்.

இந்தியா முழுமையையும் “பரதகண்டம்” – “பாரதம்” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை அடி யொற்றி, அந்த “பரத” கண்டத்தின் அடியொற்றி, அந்த பரத கண்டத்தின் புராதன வரலாற்றைத் திறனாய்வுடன் சொல்லும் பாங்கில் எழுதியுள்ளார் கால்டுவெல். சதுர்வேதங்கள் தொடங்கி இராமாயணம், மகாபாரதம், வாயுபுராணம் உள்ளிட்ட புராணங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள்தாம் இந்நூலில் உள்ளன. பரதகண்ட புராதனம் என்பதற்கு ஆங்கிலத்தில் – “Indian Antiquities By the Late Bishop Caldwell” என்று தாம் கண்ட மூலநூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக திரு பொ. வேல்சாமி குறிப்பிடுகிறார். இந்நூல் 1893 இல் வெளி யிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது என்கிறார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்டது 1856இல்! சமற்கிருத இலக்கியங்களில் மூழ்கிப் போயிருந்த கால்டுவெல், தமது ஒப்பிலக்கண நூலில் தமிழர்களைப் பழங்குடியினர் (Tribe) என்றும் தமிழை – பழங்குடிகளின் கிளை மொழி (Dialect) என்றும் பல இடங்களில் குறிப்பி டுகிறார். சமற்கிருதத்தை ஒரு பழங்குடிக் கிளைமொழியாக(Dialect)ப் பார்க்கும் ஆய்வுமுறை அவரிடம் இல்லை. எனவே சமற்கிருத நூல்களான மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம், தந்திரவார்த்திகா மற்றும் புராணங்கள் போன்றவற்றில் கூறப்படும், ஆரியச் சத்திரியர்களில் இழிவடைந்து போன சூத்திரப் பிரிவினரான திராவிடர் களைத் தமிழர்களின் மூலவர்கள் – மூதாதையர் என்று குறிப்பிடுகிறார்.

புறநானூறு, அகநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், பூதத்தாழ்வார் பாடல், கம்பராமாயணம், பெரியபுராணம், இளம்பூரணரின் தொல்காப்பிய உரை போன்ற தமிழ் நூல்கள் தமிழர் – தமிழகம் – தமிழ்நாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் எதுவுமே கால்டுவெல்லுக்குக் கிடைக்கவில்லையா?

அதுமட்டுமன்று மானிடவியல் ஆய்வு, மரபு இனவியல் ஆய்வு போன்றவற்றில் எதையும் தமது இன ஆய்வுக்கு அடிப்படையாய் கால்டுவெல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய சமற்கிருத வர்ணாசிரம தர்ம மனு நூல், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை தான் தமிழர்களுக்கான இன அடையாளம் குறிக்க கால்டுவெல் கையாண்ட “சமூக அறிவியல்” நூல்கள்!

இப்படியாக வருவிக்கப்பட்ட ஆரிய அடையாள திராவிட இனத்தைத்தான் பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தமிழர்களின் தனித்த அடையாளத்தை – மறைத்து அல்லது அதை நீர்த்துப் போகச் செய்து கலப்பட இனப்பெயராகக் காணப்பட்ட “திராவிட இன” அடையாளத்தைத் திட்டமிட்டுத் திணித்தார் பெரியார். அதில் அவர்க்கான நோக்கம் இருந்தது. அதுபற்றி “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழி மாற்றியதா” என்ற எனது நூலில் எழுதியுள்ளேன்.

கவிப்பேரரசு வைரமுத்து கலப்படத் தயாரிப்பான திராவிட இனப்பெயரை ஏன் தூக்கிச் சுமந்து கொண் டாட்டம் போட வேண்டும்?

“திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்” என்கிறார் வைரமுத்து. ஒரே ஒரு திருத்தம், ஆதிச்சொல் அன்று – ஆரியச்சொல்!

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரும், சோழரும் தங்களுக்குள் சண்டையிட்டு வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டில் அயலார் ஆதிக்கம் தொடங்கியது. நீண்டகாலம் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழ நேரிட்டது. அப்போது ஆரியர்கள் தமிழர்களுக்குச் சூட்டிய இழி பெயரான – “சூத்திரர்” என்ற சொல்லையே தாங்களும் தங்களைக் குறிக்க பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு! தமிழர்களில் “உயர் சாதி” பிரிவைச் சேர்ந்தோரில் கற்றவர்கள் ஒரு சாரார், தங்களை “சற்சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொண்டது உண்டு! அதே அடிமை மனநிலையில்தான் தமிழர்கள் தங்களைக் குறிக்க இக்காலகட்டத்தில் ஆரியம் திணித்த “திராவிடர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமற்கிருதத்தினின்றும் தனித்து இயக்கக் கூடிய மொழி தமிழ் என்பதை 1816-ஆம் ஆண்டே எல்லீசு நிறுவி விட்டார். அதை 1856இல் விளக்கமாக – விரிவாக மெய்ப் பித்துள்ளார் கால்டுவெல். அதற்காக அவரைப் பாராட்டு வோம்! அதே வேளை அவர் தென்னிந்திய மொழிகளின் மூலமொழி தமிழ் என்பதை மாற்றி, “திராவிடம் மூலமொழி” என்று திணித்த ஆய்வியல் அநீதியை வரலாறு மன்னிக்காது! தமக்கு முன்னோடியாய் தென்னிந்திய மொழிகள் ஆய்வில் விளங்கிய எல்லீசு பற்றி கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் எதுவும் குறிப்பிடாதது வியப்பாய் உள்ளது.

“மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் – தமது தமிழ் மொழி வரலாறு நூலில் கால்டுவெல் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை – அவரது தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலின் தலைப்பு : “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்”.

அதில் முதல் தவறு, “திராவிடம்” என்ற பெயரில் மூலமொழி இருந்ததாகக் குறித்தது. அந்த மூலமொழி தமிழே!

தமிழர்களை உயர் நாகரிகர்களாக மேம்படுத்திய வர்கள் ஆரியர்கள் என்று கால்டுவெல் கூறியிருப்பது தவறு. ஆரியர் தொடர்புக்கு முன் தமிழர்களுக்கு மோட்சம், நரகம், ஆன்மா, பாவம் முதலியவை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறுவது அடுத்த தவறு.

அடுத்த தவறு, தமிழர்களுக்கு ஆயிரத்திற்கு மேல் எண்ணத் தெரியாது என்று கூறியிருப்பது.

தமிழ் நெடுங்கணக்கு (அகரவரிசை) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது என்று கால்டுவெல் கூறுகிறார். ஆரிய எழுத்துகளுள் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைத் தமிழர்கள் விட்டு விட்டனர் என்று கூறுகிறார். இது தவறு!

அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் என்பன வடசொற்கள் என்று கால்டுவெல் கூறுவது தவறு!

மேலும் இலக்கண அடிப்படையில் கால்டுவெல் செய்த தவறுகளையும் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார் (தமிழ் வரலாறு – பாவாணர், பக்கம் 26 – 28).

கால்டுவெல் இல்லையென்றால் – மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இல்லை, மறைமலையடிகள் இல்லை, அண்ணா இல்லை என்று வைரமுத்து கூறுவது, உணர்ச்சி ஆரவாரம் தவிர உண்மையில்லை!

தொல்காப்பியம், புறம், அகம், காப்பியங்கள், ஆன் மிக இலக்கியங்கள் – தமிழர்களின் அறிவுத்துறை சாதனைகள்! இமயத்தில் வெற்றிக்கொடி ஏற்றி வாழ்ந்த இனம் – தமிழினம்! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், ஆரிய மன்னர்களான கனகன் விசயன் ஆகியோரை அடக்கி அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போன்றோர் தமிழ்ப் பேரரசர்கள்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் – போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத நோயாம் – பார் கொண்ட மக்களுக்குப் பஞ்சமும் பிணியு மாம்” என்று எச்சரித்தவர் திருமூலர். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடாதீர்; சூதாகச் சொன்னதல்லால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார்.

தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளி – வள்ளலார்! அவர் தொடங்கிய சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சங்கம் ஒருவகை நிகரமை (சோசலிச)க் கொள்கைக்கு முன்னோடித் திட்டம்!

மறைமலை அடிகளார் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் – தமிழில் சமற்கிருத சொற்களை நீக்கி எழுத வேண்டும்; தமிழர் கோயில் மற்றும் குடும்பச் சடங்குகளை பிராமணப் புரோகிதர்களை நீக்கி தமிழ் அறவோரைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற இலட்சியங்களை முன்வைத்தது. 1930களில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்தது. தமிழர் என்பதைக் கைவிட்டு, பின்னர் திராவிடர் என்று மாற்றிக் கொண்டவர் பெரியார்.

திராவிடர் என்பதில் கால்டுவெல்லுக்கே கடைசி வரை ஐயுறவு இருந்ததால், தமது ஒப்பிலக்கண நூலுக்கு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்று இரு பெயர் சூட்டினார்.

திராவிடம் என்ற பெயரில் மொழியும் இல்லை; இனமும் இல்லை; நாடும் இல்லை! அப்பெயர் ஆரியம் சூட்டிய திரிபுப் பெயர்!

தமிழே நமக்கு மூலமொழி (Proto Language); தமிழே நமக்கு வளர்ந்த பொது மொழி (Standard Language). தமிழர் என்பதே நமது மரபு இனம் (Race), தமிழர் என்பதே நமது தேசிய இனம் (Nationality).

கவிப்பேரரசு அவர்களே, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்; அருள்கூர்ந்து மறுவாசிப்பு செய்யுங்கள்!

Leave a Response